இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமலானதால் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் சமையல் எரிவாயு உற்பத்தியை (எல்பிஜி) அதிகரிக்க வேண்டும்.
இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட துறைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம், போக்குவரத்துக்கான சிஎன்ஜி (CNG) உள்ளிட்டவை இந்தத் துறைகளில் அடங்கும்.
“எல்பிஜி தயாரிக்க பயன்படும் ப்ரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.”
“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை எரிவாயு உற்பத்தியாளர், இறக்குமதியாளர், சந்தைப்படுத்துபவர் அல்லது விநியோகஸ்தர் ஒவ்வொருவரும் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, ஒதுக்கீடு, வழங்கல் மற்றும் நுகர்வு தொடர்பான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.



