பைடனின் கருத்தால் சர்ச்சை – சீனாவை சமாதானப்படுத்தும் அமெரிக்கா

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த கருத்தால் எழுந்த முறுகல் நிலையை தணிக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாக என்.பி.சி செய்தி நிறுவனம் கடந்த புதன்கிழமை (21) தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (20) கொடைவழங்கும் செல்வந்தர்களுடன் பேசும் போது சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவிற்குள் நுளைந்தது சீனா அதிபருக்கு தெரியாதாம். பலூன் எங்குள்ளது என தெரியாத சர்வாதிகாரி அவர் என பைடன் தெரிவித்திருந்தார்.

பைடனின் இந்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதுடன் அது ஒரு அரசியல் சீண்டல் என சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் கடுமையான கண்டனத்தை உடன்டியாகவே தெரிவித்திருந்தது.

ஆனால் 80 வயதான பைடனின் கருத்து அமெரிக்காவின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்காது எனவும், பைடன் இவ்வாறான முரன்பட்ட கருத்துக்களை அடிக்கடி தெரிவிப்பதாகவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சகத்தை தொடர்புகொண்ட வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் சீனாவுக்கு சென்ற சில நாட்களில் பைடன் இந்த கருத்தை வெளியிட்டது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கலாம் என அச்சம் எழுந்திருந்தது.

ரஸ்யாவில் ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக கடந்த வருடம் போலந்தில் பைடன் தெரிவித்த கருத்தால் எழுந்த சர்ச்சைகளையும் அமெரிக்க அதிகாரிகள் பின்னர் சமாளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.