இலங்கையில் தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு- அச்சத்துடன் வாழும் மக்கள்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு

இலங்கையில்  பல்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்கள், வைத்தியசாலை, உணவகங்கள் என சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து  இடம்பெற்று வருகின்றது.

இந்த வெடிப்பு சம்பங்கள்  தொடர்ச்சியாக  இடம்பெற்று வருவதனால் உயிர் சேதங்களும் உடமை சேதங்களும் அதிகரித்து வரும் நிலையில் இந்த வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அந்தவகையில்  இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரை 800க்கும் மேற்பட்ட  சமையல் எரிவாயு வெடிப்புக்களும், சமையல் எரிவாயு வெடிப்புக்களால் மொத்தம் 7  பேர் உயிரிழந்தும் உள்ளனர். வவுனியா மாவட்டத்தில் மட்டும் 5 சமையல் எரிவாயு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளது.

இவ்வெடிப்புக்கள் ஏன் இடம் பெறுகின்றது?  அதற்கான காரணங்களை கண்டறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்  7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. பின்னர் சிலிண்டர்கள் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவிக்கலாம் என்ற கருத்து வெளியிடப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியான முறையில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றது. இதனால் இன்று பல உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. அதுமட்டுமன்றி மக்களும் பயன்படுத்துவதற்கு அச்சமடைந்து மாற்றுவழிகளை தேடி வருகின்றனர்.

குறித்த பிரச்சினைக்கு அரசாங்க தரப்பினர் இதுவரை சரியான காரணங்களை கண்டறிந்து  தீர்வினை முன்வைக்கவில்லை. அவர்கள் சமையல் எரிவாயு பிரச்சினைக்கு சரியான தீர்வினை முன்வைக்கும் வரை பொதுமக்கள் சமையல் எரிவாயுவினை பயன்படுத்த அச்ச உணர்வுடனையே பயன்படுத்தும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளபட்டிருக்கின்றார்கள் என்றேதான் கூறவேண்டும்.

Tamil News