தொடரும் தட்டுப்பாடு – பருத்தித்துறையில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்

ppd தொடரும் தட்டுப்பாடு - பருத்தித்துறையில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்

எரிபொருள்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மண்ணெண்ணெய்க்காக பருத்தித்துறையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சமையல் தேவைகளுக்காக பயன்படுத்துவோர் என சமூகத்தின் பெரும்பாலானவர்கள் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி பகுதியில் எங்காவது  ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே மண்ணெண்ணெய் விநியோகம்  இடம்பெற்று வருகின்றது.

இதனால் மக்கள் தினமும் மண்ணெண்ணெய்க்காக அலைந்து திரியும் நிலை காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக எங்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவில்லை.

இந்நிலையில் பருத்தித்துறை – மந்திகை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை முதல் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது. இதனையறிந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெயை வாங்கிச் சென்றிருந்தனர்.

இதையடுத்து இன்றும் (26) அதிகாலை முதல் அதிகளவான மக்கள் மண்ணெண்ணெய்காக காத்திருந்த போது, எரிபொருள் நிலையத்தில் இயந்திர கோளாறு காரணமாக விநியோக நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் மண்ணெண்ணெய்க்காக வந்தவர்கள் தமது கலன்களை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு அருகே  காத்திருந்திருந்தனர்.