வவுனியாவில் காவல்துறையினரின் செயற்பாட்டுக்கு எதிராக முறைப்பாடு

வவுனியா மாவட்ட முன்னிலை சோசலிசக் கட்சி செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் சட்டவிரோதக் கைதுகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்குச் சென்று முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்தனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னிலை சோசலிசக் கட்சி செயற்பாட்டாளர் ஜகத் கித்சிறி நவரத்ன கடந்த 16ஆம் திகதி பொலிஸாரினால் எவ்வித நியாயமான காரணமோ அல்லது குற்றச்சாட்டுகளோ இன்றி தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தச் சட்டவிரோதக் கைது நடவடிக்கை, ஜனநாயக ரீதியில் அரசியல் பணிகளில் ஈடுபடும் உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அந்த கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய கட்சியின் செயற்பாட்டாளர் சந்தன சிறிமல்வத்த, “தற்போதைய திசைகாட்டி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்தது.
ஆனால், இன்று பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் இன்னும் கொடூரமான சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயல்கிறது.

போராட்டங்களில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்துவது, பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்வது மற்றும் அபாண்டமாக வழக்குத் தொடர்வது போன்ற செயல்களில் பொலிஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி செயற்பாட்டாளர் சந்தன சிறிமல்வத்த தெரிவித்துள்ளார்.