கொந்தளிக்கும் கொழும்பு ஆட்டங்காணும் கோட்டா! | அகிலன்

211 Views

‘கோட்டா கோ கம’ போராட்டம் சற்று தொய்வடைந்து ராஜபக்சக்கள் மீண்டும் அரசியலுக்குள் வருவதற்கான நகர்வுகளை முன்னெடுத்திருக்கும் நிலையில், கொழும்பு அரசியலில் இரண்டு முக்கியமான காய் நகர்த்தல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டுமே ஜூலை 9 ஐ இலக்காகக்கொண்டிருப்பதால் கொழும்பு மீண்டும் பரபரப்பாகியிருக்கின்றது. ஜூலை 9 இல் முக்கிய மாற்றம் ஏதாவது இடம்பெறுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

முதலாவது – ஜூலை ஒன்பதாம் திகதி கொழும்பில் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் பல மட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் இதற்கான ஆதரவை அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் கேட்டுள்ளார்கள். கோட்டாபய ராஜபக்சவை பதவி துறக்கச் செய்வதற்கான அழுத்தம் இதன்மூலமாக அதிகரிக்கவுள்ளது.

இரண்டாவது – அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டி பொது நிலைப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுக்களில் சாதகமான சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

ஒரு புறம் அரசியல் ரீதியான நகர்வு. மறுபுறம் மக்களை அணி திரட்டி போராட்டங்கள் மூலமாக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நகர்வு. இரண்டும் கோட்டா – ரணில் அரசை வீட்டுக்கு அனுப்புவதையும், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதையும் இலக்காகக்கொண்டதாகவே இருக்கின்றன.

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் கோட்டா கோ கமவில் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்ற இளைஞர்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாகவே புதன்கிழமை கொழும்பு பேச்சுக்கள் இடம்பெற்றன. அத்துடன் பொது ஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதில் அவர்கள் ஆர்வம்காட்டுகின்றார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே, சர்வக்கட்சி அரசு தொடர்பான அரசியல் மட்டத்திலான கலந்துரையாடல் கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்றது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த 2 ஆம் சுற்று பேச்சில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுதந்திரக்கட்சி, 43 ஆம் படையணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான – நகர்வுகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சி தலைவர்களை உள்ளடக்கிய வகையில் அரசியல் நடவடிக்கை மற்றும் பொருளாதார விவகார குழுவொன்றை அமைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசுக்கான முதல் சுற்று பேச்சு செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஜே.வி.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் அக்கட்சி பங்கேற்கவில்லை. புதன்கிழமை சந்திப்பிலும் அக்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

எனினும், உரிய வேலைத்திட்டத்துடன், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, சர்வக்கட்சி அரசொன்று ஸ்தாபிக்கப்படுமானால் வெளியில் இருந்து கொண்டு அதற்கு ஆதரவு வழங்க தயார் என அநுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அறிவித்தார்.

அதேவேளை, எதிரணிகளின் பங்களிப்புடன் அமையும் சர்வக்கட்சி அரசுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் எனவும், இலகுவில் 113 ஐ திரட்டக்கூடியதாக இருக்கும் எனவும் எதிரணி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

இதேவேளையில், காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தினை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் எதிர்கட்சியின் அரசியல் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் பொதுவான இணைக்கம் காணப்பட்டுள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘போராட்டத்தை வெல்லும் கருத்தொற்றுமை’ என்ற பெயரில் கொழும்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டுப் பொது மாநாட்டில் சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, அனுர பிரியதர்சன யாப்பா, மனோ கணேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஓரணியில் அமர்ந்து ஒன்றிணைந்து பொதுவான ஒருமித்த கருத்துக்காக போராட இணங்கியுள்ளது.

போராட்டக்காரர்கள் சார்பில் நான்கு விடயங்கள் அடங்கிய யோசனை முன்வைக்கப்பட்டு ஒருமித்த கருத்து நிறைவேற்றப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த நான்கு விடயங்கள் இவைதான்:

  1. கோட்டாபய ராஜபக்ச உடனடியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும்.

  2. ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச ஆட்சி மற்றும் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

  3. மக்கள் போராட்டத்தின் பொருளாதார, சமூக, அரசியல் நோக்கங்களுக்கும், நோக்கங்களுக்கும் ஏற்ப இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான எவரும் அதில் பங்கேற்கக்கூடாது, பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

  4. 19 ஆவது அரசமைப்பின் திருத்தத்தின் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்களைக் கண்டறிந்து நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கும் 19 பிளஸ் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஜூலை 09 ஆம் நாளுக்கு முன்னர் பதவி விலகாது விட்டால் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தொடர்ச்சியான பொதுப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் சனிக்கிழமை இலங்கையில் போராட்டம் நிறைந்த திருப்புமுனையை ஏற்படுத்தும் நாளாக அமையலாம். இதனால், தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அரசாங்கத்தையும் பாதுகாக்கும் வகையில் முப்படைகளும் குவிக்கப்படலாம். அரசாங்கமும் தயாராகவே இருக்கின்றது. இறுதி வேளையில் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

கோட்டாபயவுக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்கும் 9 ஆம் திகதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது.

ஏப்ரல் 9 – இல்தான் சமூக ஊடகங்கள் மூலமாக இணைந்த இளைஞர் – யுவதிகள் காலி முகத்திடலில் ஒன்றுகூடிய ‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோசத்துடன் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய தினம் சுமார் ஐம்பதாயிரம் இளைஞர்கள் அங்கு திரண்டு – தொடர் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். கோட்டாபய பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மே 9 – மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச – அலரி மாளிகையிலிருந்து திருமலை கடற்படைத் தளத்துக்கு பாதுகாப்பாக தப்பிச் சென்றார்.

ஜூன் 9 – பசில் ராஜபக்ச தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்!

அந்த வகையில்தான் ஜூலை 9 ஆம் திகதி கோட்டாபயவுக்கான காலக்கெடுவாக முன்வைக்கப்பட்டது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமது போராட்டம் கோட்டாபய பதவி விலகும் வரை தொடரும் என சஜித் அணி அறிவித்திருக்கின்றது. கொழும்பு கொந்தளிக்கின்றது! என்னதான் நiடைபெறப்போகின்றது?

Leave a Reply