430 Views
துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
திருகோணமலையின் கிண்ணியா பிரதேச தள வைத்தியசாலையில் கடமையாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் (28) சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது கிண்ணியா தள வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் அங்கு கடமையாற்றும் சுமார் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் “ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே” “ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து தாருங்கள்”, “எமது சம்பளத்தை கூட்டித் தாருங்கள்” முதலான சுலோகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு நாளொன்றுக்கு 650 ரூபா சம்பளம் தருகிறார்கள் இது போதாது 850 கூட்டித் தாருங்கள் 4 – 7 வருடங்கள் இங்கு வேலை செய்கின்றோம். இதை நம்பித்தான் எங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள் சம்பளம் போதாதது அரிசி விலை, மாவிலை, சீனி விலை ஏன் எங்களுக்கு சம்பளத்தைக் கூட்டித் தர முடியாது எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.