மக்கள்தொகையை அதிகரிக்க சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் 2025-ஆம் ஆண்டில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
திங்கட்கிழமை அன்று வெளியான சீன அரசின் தரவுகள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 5.63 பிறப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. 1949-இல் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பதிவானதில் மிகவும் குறைவான விகிதம் இது.
அதே வேளையில் இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 8.04 என அதிகரித்துள்ளது. இது 1968-இல் இருந்து பதிவானதில் மிகவும் அதிகமான விகிதமாக உள்ளது.
2025-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள்தொகை 33.9 லட்சம் சரிந்து 140 கோடியாக உள்ளது. 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது கணிசமாக சரிந்துள்ளது.
முதுமையடைந்து வரும் மக்கள்தொகை மற்றும் குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சீன அரசு ஊக்குவித்து வருகிறது.
2016-ஆம் ஆண்டு சீன அரசு தனது ஒரு குழந்தை கொள்கையை தளர்த்தி இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதித்தது. இந்த அறிவிப்பு பிறப்பு விகிதத்தை கணிசமாக அதிகரிக்காத நிலையில் 2021-ஆம் ஆண்டு ஒவ்வொரு தம்பதியினரும் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



