போருக்குப் பின் இலங்கைக்கு சீனாவே உதவியது – கோட்டபாய

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்ய சீனாவே முன்வந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரிய மக்கள் குடியரசு, ஜேர்மன், வத்திக்கான், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதியை சந்தித்தித்தனர்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய கோட்டபாய,

“2009ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாதம் தோல்வியுறச் செய்ததன் பின்னர், நாட்டின் துரித அபிவிருத்தியையே அரசாங்கமும், மக்களும் எதிர்பார்த்தார்கள்.

போர் காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது.  நாட்டின் துரித அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சீனாவே முன்வந்தது.

இந்த நிலையில், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒரு வர்த்தக ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களே இடம்பெற்றது. எனினும், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை சில தரப்பினர் பக்கச்சார்பானதாக வியாக்கியானம் செய்தனர். சீனா மட்டுமின்றி, அனைத்து நாடுகளுடனும் இலங்கை நட்புறவாகவே உள்ளது” என்றார்.