பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும்- ஜெனீவாவில் கோரிக்கை

பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என ஜெனீவாவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் உரையாற்றிய கெவின் கணபதிபிள்ளை இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 4-ஐ.நா மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமை சூழ்நிலைகள் ( Item 4 – Human rights situations that require the Council’s attention – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் குழும ஆற்றல்படுத்துவதற்கான, வளர்ச்சிக்கான அமைப்பு சார்பாக உரையாற்றிய கெவின் கணபதிபிள்ளை,

“அனைத்து நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிய மனித உரிமை பேரவை உறுப்பினர், உயர் மனித உரிமை ஆணையரது அறிக்கை, உறுப்பினர்களின் குறுக்கீடுகள் ஆகியவற்றை வரவேற்கின்றேன். ஆனால் அந்த அறிக்கைகளில், தலையீடுகளில் பாலஸ்தீனர்களின் நில ஆக்கிரமிப்பு, இந்தியா, பாகிஸ்தான் ஆட்சிசெய்யும் காஷ்மீர், கொங்கொங் சிறப்பு நிர்வாகப்பகுதி, சிங்சியாங் உய்கூர் தன்னாட்சி பகுதி, ரோகின் நாட்டில் ரோகிங்கிய மக்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால் தமிழர்கள் இன அழிப்பினை சந்தித்தனர். அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் (28 டிசம்பர், 2008 முதல் மே 2009 வரை) 1,47,000 தமிழ் மக்களை இராணுவம் கொலை செய்தது. தமிழர்களின் தாயகத்தை இராணுவம் அபகரித்தது.  மக்கள் தேர்வு செய்த வடக்கு மாகாண சபை தமிழின அழிப்பிற்கு எதிராக பன்னாட்டு விசாரணையை நடத்த வேண்டுகோள் வைத்தது. 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தாலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பாகுபாட்டை காட்டி வருகின்றனர்.

அதனால் இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை நடத்த வேண்டும், பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து, உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கவேண்டும். இராணுவ மயமாக்குவதையும் காலனியாக்குவதையும் நிறுத்தவேண்டும்” என்றார்.