ரம்புக்கனை விவகாரத்திற்கு பொறுப்பேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை

20220420 003828 ரம்புக்கனை விவகாரத்திற்கு பொறுப்பேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் - சாணக்கியன் கோரிக்கை

பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தொடரூந்து மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் தொடரூந்து சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டது.

அத்துடன், எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் இதற்கு கண்டனம் வெளியிட்டு தனது ட்விட்டரில், புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஒரு உயிர் பலி எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் எனவும் அவர் இரா.சாணக்கியன்  வலியுறுத்தியுள்ளார்.