அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ எண்ணும் குடியேறிகள் எதிர்கொள்ளும் சவால்கள் 

அவுஸ்திரேலியாவில் நிலவும் திறன்வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக  நிரந்தர புலம்பெயர்வு நோக்கி புதிய குடியேறிகள் படையெடுப்பார்கள் எனக் கருதப்படுகிறது. 

ஆனால் அவர்களுக்கு கனிவான வரவேற்பு கிடைக்குமா? அவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? என்பது குறித்து அவுஸ்திரேலியாவின் Edith Cowan பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் ஓமிட் ரெசாய் ஆராய்ந்திருக்கிறார்.

ஆங்கிலம் பேசும் பின்புலம் இல்லாத குடியேறிகள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ள கடந்த 1975 மற்றும் 2021  இடையிலான ஆண்டுகளில் வெளியான 56 கட்டுரைகளை அவர் ஆராய்வுக்கு உட்படுத்தி உள்ளார்.

இதில் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார ஆதரவு சேவைகளில் முன்னேற்றம் உள்ள போதிலும் வேலையைப் பெறுவது, தங்குமிடத்தை கண்டடைவது உள்ளிட்ட முக்கியமான ஒருங்கிணைவு செயல்முறைகளில் பெரும்பாலான குடியேறிகள் முன்னேற்றத்தை காணவில்லை என ஆய்வாளர் ஓமிட் ரெசாய் கூறியிருக்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளாக இந்த தடைகளை நீக்குவதில் சிறிய அளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்திருக்கிறார்.

‘வெள்ளை அவுஸ்திரேலியா’ எனும் இனவெறி கொள்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அவுஸ்திரேலிய சமூகத்தை கட்டமைப்பதில் ஆங்கில பேசும் பின்புலம் இல்லாத குடியேறிகள் முக்கிய பங்காற்றியிருப்பதாக அவரது ஆய்வு குறிப்பிடுகிறது.

“மக்கள் தொகையை உயர்த்தல், வேலைகளை உருவாக்குதல், கலாச்சார ரீதியாக அவுஸ்திரேலிய சமூகங்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவது என குடியேறிகள் அவுஸ்திரேலிய சமுதாயத்துக்கு  பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், அவுஸ்திரேலியாவில் இன்னும் இனவாதம், பாகுபாடு உள்ளது என்றும் குறிப்பாக ஆப்பிரிக்க, முஸ்லிம் குடியேறிகள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் வேலைவாய்ப்பின்மை, மொழித்தடை, இனவாதம், தங்குமிடம் கிடைப்பத்தில் சிக்கல், சமூக பிணைப்பு உள்ளிட்ட சவால்களை ஆங்கில பின்புலம் இல்லாத குடியேறிகள் எதிர்கொள்கின்றனர் அவரது தனது ஆய்வின் மூலம் கூறியிருக்கிறார். இந்த ஆய்வு “அவுஸ்திரேலியாவில் ஆங்கிலம் பேசும் பின்புலம் இல்லாத குடியேறிகள் எதிர்கொள்ளும் ஒருங்கிணைவு சவால்கள்,” என்ற தலைப்பில் Diaspora Studies எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.