செம்மணி உள்ளடங்கலாக நாட்டில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்துடன் கூடிய நம்பகமானதும், சுயாதீனமானதுமான தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க நிகழ்வில் வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் இடம்பெற்ற உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமையை மேம்படுத்துதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடல் அமர்வில் கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் உரையாற்றிய போதே அந்த அமைப்பினர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பவற்றுக்கான உத்தரவாதத்தை இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் மீறல்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் சார்பில் இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்கள் எங்கே? அவர்களது நிலை என்ன? என்ற பதில் தெரியாமல் வாழ்கின்றனர்.
அத்துடன் பதில்களைத் தேடும் பயணத்தில் பல ஆண்டுகளாகத் தொடர் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்ற 16 ஆயிரத்து 966 முறைப்பாடுகளில் வெறுமனே 31 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழு அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
இது பொறுப்புக்கூறல் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படாமல் இருப்பதைக் காண்பிக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி உள்ளடங்கலாக நாட்டில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்துடன் கூடிய நம்பகமானதும், சுயாதீனமானதுமான தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அண்மைய அறிக்கையில் இந்தக் கொடூரமான குற்றங்கள் தொடர்பில் போதியளவு பிரஸ்தாபிக்கப்படாமையும், குற்றவியல் நீதிப் பொறிமுறையை மீள வலியுறுத்தாமையும் பெரிதும் கவலையளிப்பதாகவும் புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று ஐ.நா வின் பக்க நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.



