எதிர்வரும் திங்கட்கிழமை நிதியமைச்சர் ஆற்றவுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை தொடர்பில் கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் அலமாரிகள் உட்பட முழு பாராளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது, இராஜதந்திரிகளுக்கு மாத்திரமே காட்சியகங்கள் மட்டுப்படுத்தப்படும்.
இந்த நாளில் உறுப்பினர்களின் வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டிருக்கும் என்பதால், உறுப்பினர்களின் வாகனங்கள் சம்பந்தப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களை இயன்றவரை ஓட்டுநர் ஓட்டும் வாகனத்தில் வருமாறு கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தானாக இயக்கும் வாகனங்கள் நுழைவாயிலில் நிறுத்தப்படுவது தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்களின் ஓட்டுநர்களால் கவனிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், அன்றைய தினம் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பொலிஸார் மற்றும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மூலம் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
மேற்படி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.