பிரேசிலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பிரேசிலின் பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலில் இருந்து கேரோலியோஸில் உள்ள சாவ் பாலோ சர்வதேச விமான நிலையம் நோக்கி வியோபாஸ் 2283 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 62 பேர் இருந்தனர். இந்த சூழலில், வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த செய்தி நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுவதும், பின்னர் தலைகீழாக கவிழ்ந்து விழுந்ததும் தெரிகிறது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில், விமானத்தில் இருந்து கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவது இடம்பெற்றது.
இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் பிழைக்கவில்லை என்று முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.