மியான்மாரின் புதிடாங் நகரிலிருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (9) மீட்புக் குழுவினர் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட ஏழு பேரின் உடல்களை மீட்டதோடு, இதுவரை 13 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக மலேசிய கடல்சார் அமைப்பின் (MMEA) பிராந்தியத் தலைவர் ரோம்லி முஸ்தபா தெரிவித்தார்.
படகு தாய்லாந்தின் கோ தாருடாவ் தீவுக்கு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த படகில் சுமார் நூற்றுக்காணக்கானவர்கள் இருந்ததாகவும், இது மியான்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட 300 ரோஹிங்கியாக்களின் பெரிய குழுவில் ஒன்றாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு கரைக்கு அருகில் வந்தபோது, அவர்கள் மூன்று சிறிய படகுகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டனர். ஒவ்வொரு படகிலும் சுமார் 100 பேர் ஏற்றப்பட்டிருந்தனர் என கடா மாநில பொலிஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
ஏனைய இரண்டு படகுகள் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவிவ்வை. அந்தப் படகுகள் குறித்து லங்காவி தீவைச் சுற்றிய 583 சதுர கிலோமீற்றர் பரப்பில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.



