கச்சத்தீவு குறித்து கடிதம் எழுதிய ஸ்டாலினுக்கு பா.ஜ.க பதில்

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நாடகம் ஆடுவது தெரியவரும்’ என்று பாரதிய ஜனதா கட்சி பதில் அளித்துள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுமாறு, இந்திய பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்ற கழகத்தினர்  தமிழக மீனவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், தங்களின் சுயநலத்துக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அனைவருக்கும் தெரிந்துள்ள போதிலும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, மு.க.ஸ்டாலின் கூறி நாடகமாடுகிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த செப்டம்பரில் கச்சத்தீவுக்கு பயணம் செய்தார்.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் அல்லாமல், தன் அமைச்சர்களுடன், மு.க.ஸ்டாலினும் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் கச்சத்தீவை மீட்கக் கோரி, இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் இதுவரை 4 தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.