விரைவில் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி – எச்.எஸ்.பி.சி

அமெரிக்காவின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு பகுதியில் அது பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கலாம். அடுத்த ஆண்டில் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சி காணலாம் என பிரித்தானியாவை தளமாககக் கொண்ட எச்.எஸ்.பி.சி என்ற வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் நடுப்பகுதிக்கான பொருளாதார அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ள அதேசமயம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் அதன் பின்னால் செல்கின்றது.

எனினும் உலகின் சில நாடுகளின் பொருளாதாரம் தற்போதைய நிலையை தாக்குப்பிடிக்கும் நிலையில் உள்ளது என இந்த வங்கியின் உலக நாடுகளின் நடவடிக்கைக்கான தலைவர் ஜோசப் லிற்றில் தெரிவித்துள்ளார்.

நிதிக் கட்டுப்பாடுகளை இறுக்குவதும், உலக நாடுகளின் பார்வைக்கேற்ப பொருளாதார நடவடிக்கைகளை மறுசீரமைக்காததுமே தற்போதைய நிலைக்கான காரணம். அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமது வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. இந்த வட்டி விகித அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் மேலும் சில காலம் நீடிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்