பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சிறந்தது – ஜீ.எல்.பீரிஸ் 

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சிறந்த தீர்வாக அமையும் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதமானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை புறக்கணித்துள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் உடன் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று (20) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த வேண்டுமா என்பதை நிதியமைச்சர் தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கிறார். பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலையை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயார் இல்லை என்ற காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் இருந்து தடையேற்படுத்தி வருகிறார்.

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை திறைச்சேரி தாமதப் படுத்தியதை தொடர்ந்து தேர்தல் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப் பட்டுள்ளன. தேர்தலுக்கு நிதி இல்லை என்பது உண்மையல்ல,அரசாங்கத்திற்கு வாக்கு இல்லை அதனால் அரசாங்கம் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதே உண்மை.

வெற்றி பெறும் போது தேர்தலை நடத்துவதும்,தோல்வியடையும் சூழல் காணப்படும் போது தேர்தலை பிற்போடுவதும் உண்மையான ஜனநாயகம் அல்ல, அரசியலமைப்பின் பிரகாரம் காலத்திற்கு காலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.நிதியமைச்சின் செயலாளர் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுகிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம். இலங்கையில் மக்களாணையுடன் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என சர்வதேசம் குறிப்பாக சர்வதேச நாணயம் நிதியம் வலியுறுத்தியுள்ளது, இவ்விடயத்தை ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ நாட்டு மக்களுக்கு அறிவிக்கவில்லை.

ஏற்றுக்கொள்ளக்கூடிய மதிப்பீட்டுக்கு அமைய நாட்டின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதமானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை முழுமையாக புறக்கணித்துள்ளார்கள். மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மை நோக்கம் ஜனாதிபதிக்கு இருக்குமாயின் மக்களாணையுடனான ஒரு அரசாங்கத்தை தோற்றுவிக்க அவர் இடமளிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தற்போது ஜனாதிபதி வசமாக்கப்பட்டுள்ளது, ஆகவே தேசிய மற்றும் சர்வதேசத்தின் வலியுறுத்தலுக்கு அமைய பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சிறந்த தீர்வாக அமையும்“ என்றார்.