மட்டக்களப்பு : தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்

279 Views

தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விசேட நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் நிலைமை மிக மோசமாக அனுபவித்து தற்போது திருப்திகரமான நிலைக்கு வந்திருக்கிறோம் என்று கூறமுடிகிறது. இதுவரை 23000 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப் பட்டதுடன் 307 தொற்றாளர்கள் மரணித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதியப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் டெல்டா,அல்பா போன்ற பல வேரியன்ட்கள் அடையாளப் படுத்தப்பட்டு வந்திருந்தது. தற்போது ஒமிக்ரோன் தொற்று காணப்படுகிறது.

இந்தநிலையில் நாம் அடுத்தகட்ட நகர்வுக்குள் நுழைந்துகொண்டு இருக்கின்றோம். பொருளாதார,சமுக பிறழ்வுகளில் இருந்து வெளிவரவேண்டிய தேவை இருக்கின்றது. இதனால் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து தடுப்பூசிகளை பெற்று நிரந்தர தீர்வை நோக்கி செல்ல வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படும் காலம் இக்காலத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கும். கடந்த வருடம் 2800 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் இந்த வருடம் மிக குறைவாக பதிவாகியுள்ளது. இதுவரை ஜனவரி பிப்ரவரி மாதத்திற்குள் 75 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள். எதுவிதமான மரணங்களும் டெங்கினால் பதிவுசெய்யப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டம் தற்பொழுது புதுவிதமான ஒரு அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அதாவது தொழுநோய் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு இருக்கின்றது. கடந்த வருடத்தில் 731 நோயாளர்கள் இலங்கை முழுவதும் அடையாளப் படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். இதனுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 110 நோயாளிகள் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து 30 நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவற்றுள் 18 நோயாளிகள் மட்டக்களப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

சுகாதாரத் துறையினர் இதனை ஒரு பாரிய பிரச்சினையாக அடையாளப்படுத்தி இருக்கின்றோம். கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நிறைவுற்றதன் பின்னர் தோல் நோயினை முகாமைத்துவம் செய்வதற்கான செயற்பாடுகளை நாங்கள் அதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்” என்றார்.  Tamil News

Leave a Reply