மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்: பண்ணையாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

மட்டக்களப்பு — மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளில் பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி, அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடமளிக்கும் வகையில் பொலிஸாரும் மகாவலி அதிகார சபையும் செயற்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, இந்நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, தங்களது மேய்ச்சல் தரை காணிகளை மீட்டுத் தருவதற்கு ஜனாதிபதியும் மக்கள் பிரதிநிதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை (08)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன் தெரிவிக்கையில், கடந்த ஜூன் மாதம் முதல் தாங்கள் இப்பகுதியில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக பல தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என்றும் கவலை வெளியிட்டார்.

“பயிர்ச்செய்கையில் ஈடுபட மாட்டோம் எனக் கூறிவிட்டு, இறுதியில் மகாவலி அதிகார சபை மூலம் அந்நிலங்கள் பிறருக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்களை அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மாடுகளை மேய்க்குமாறு கூறுகிறார்கள்.

காட்டில் கால்நடைகளுடன் வாழ முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. அரசாங்க அதிபரைச் சந்தித்து நிலமையை விளக்கியபோதிலும் தீர்வு கிடைக்கவில்லை.

கடந்த 15 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன,” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் பண்ணையாளர்கள் சிங்கள சகோதரர்களுடன் எவ்வித முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும், சில அமைப்புகளும் பொலிஸாருமே இந்த முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாகவும் அவர் சாடினார். பொலிஸார் தினமும் தங்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு வற்புறுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, தமிழ் பண்ணையாளர்கள் பயிர்களை அழிப்பதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட காணொளிகள் மயிலத்தமடு பகுதியில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அவை அம்பாறை மாவட்டத்தின் திவில்பத்தான பகுதியில் எடுக்கப்பட்டவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தவறான காணொளிகளைப் பரப்பி தமிழ் பண்ணையாளர்கள் மீது பிழையான பிம்பத்தைக் கட்டமைக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, ஜனாதிபதி, சிவில் சமூக அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக தலையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தங்களது பாரம்பரிய மேய்ச்சல் தரையை மீட்டுத்தர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.