பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்;பிள்ளையானே காரணம்-மாநகர முதல்வர்

மட்டக்களப்பு பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனே( பிள்ளையான்) காரணம் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று மாலை புளியந்தீவு பகுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.

மட்டக்களப்பு பொது நூலகத்தின் நிர்மாணப் பணிகளை அரசியல் நோக்கத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடை நிறுத்தி வைத்துள்ளதாக சிலர் பொய்யான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். உண்மையில் இந் நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முறையற்ற செயற்பாடே காரணமாகும்.

பாரிய ஒரு வேலைத்திட்டதினை செய்வதாக இருந்தால் முதலில் தேசிய திட்டமிடல் அதிகார சபையின் அங்கீகாரத்தினை பெற வேண்டும். அதன் பின் அமைச்சரவையினதும், பாராளுமன்றத்தினதும் அனுமதிகளைப் பெற வேண்டும். இவ்வாறு பெற்ற பின்னர் தான் திரைசேரியானது அத் திட்டத்துக்குரிய நிதியினை கட்டங் கட்டமாக வழங்கும் .

ஆனால் இதை எதையும் அறியாத முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதிகள் எதையும் பெற்றுக் கொள்ளாமல், கிழக்கு மாகாண சபையில் இருந்து 180 மில்லியன் ரூபாய் பணத்தினை பெற்று இந்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்திருக்கின்றார்.

2012 ஆம் ஆண்டில் மாகாண சபையின் ஆட்சி மாறியதும்,அதில் தாம் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் நஜிப் ஏ.மஜீத்தை முதலமைச்சராக்கி விட்டு, அதே மாகாண சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினராகவும்,ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பதவி வகித்தும் அவரால் நூலகத்தின் மிகுதி வேலைக்குரிய நிதியினை ஒதுக்க முடியவில்லை. இதற்கு காரணம் தேசிய திட்டமிடல் அதிகார சபையின் அங்கீகாரம் பெறப்படாமையே ஆகும். இவற்றைப் பெறுவதற்குரிய முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து 2015-2018 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஹாபிஸ் நசீர் அஹமட் முதலமைச்சராக இருந்தார். அவரால் நூலகத்துக்கு உரிய அங்கீகாரமில்லாமையால் நிதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சியை நாம் கைப்பற்றியதும் முதல் வேலையாக இந் நூலகத்தினை கட்டி முடிக்க வேண்டும் என முயற்சிகளை எடுத்த போது மத்திய அரசின் எவ்வித அங்கீகாரங்களும் பெறப்படாமல்,ஏற்கனவே செலவளிக்கப்பட்ட 180 மில்லியங்களுக்கு உரிய செலவு விபரங்களும் காட்டப்படாமல் கிடப்பில் கிடந்ததை அறிய முடிந்தது.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களின் துணையுடன் தேசிய திட்டமிடல் அதிகார சபையின் அனுமதியும்,அமைச்சரவையில் அங்கீகாரமும் பாராளுமன்றத்தில் அதற்கு உரிய அனுமதியும் பெறப்பட்டன.

இந்த அனுமதிகளைக் கொண்டு இக் கட்டிடத்தினை முழுமையாக நிறைவு செய்ய 345 மில்லியன் ரூபாய் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தினால் மதிப்பீடு செயப்பட்டதுடன்,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக 169 மில்லியன் ரூபாய்களையும், கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த றோகித போகொல்லாகமவின் ஊடாக 100 மில்லியன் ரூபாய்களையும் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுத்திருந்தோம். மிகுதியை மாநகர சபையின் சொந்த நிதியில் வழங்குவதென்றும் உறுதியளித்திருந்தோம்.

இதன் பின் தேசிய கட்டடங்கள் திணைக்களத்தினால் திறந்த கேள்வி கோரப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டன. 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பு,ஜனாதிபதி தேர்தல் தற்போது 2020 கொரோனா பிரச்சினைகளால் வேலைகள் தாமதமாகியுள்ளன.

இதை விரைவில் ஆரம்பிக்க முடியும். மத்திய அரசின் முறையான அனுமதிகளையும்,உரிய நிதி ஒதுக்கீடுகளையும் செய்து பெற்றுக் கொடுத்துள்ளமையால் இத் திட்டமானது இனி எந்த அரசாங்கம் மாறினாலும் தங்கு தடையின்றி நிறைவு செய்யப்படும். இவ்வாறுதான் இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பாரிய அபிவிருத்திகள் அனைத்தும் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என சுட்டிக் காட்டினார்.