பங்களாதேஷின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு: இலங்கைக்கும் அழைப்பு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பி.என்.பி ஆட்சி அமைய உள்ளது. பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை (17) பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, பங்களாதேஷ் நேற்று அழைப்பு விடுத்துள்ளது.

எனினும், வரும் 17 ஆம் திகதி பிரதமர் மோடி மும்பையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரனைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்க உள்ளார்.

இதனால், பிரதமருக்குப் பதிலாக பதவியேற்பு விழாவுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் செல்லவுள்ளனர்.

அதேவேளை, இலங்கைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அல்லது பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.