படகு வழியாக வந்த அகதிகளை தண்டிக்கும் அவுஸ்திரேலியாவின் தற்காலிக பாதுகாப்பு விசா முறை

391 Views

அவுஸ்திரேலியாவின் தற்காலிக பாதுகாப்பு விசா

ஆப்கானிய அகதியான அபாஸ் ஹைதரி தன்னுடைய பதின் பருவத்தின் போது சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி கடந்த பத்தாண்டுகளாக அவுஸ்திரேலியாவின் தற்காலிக பாதுகாப்பு விசாவில் வசித்து வருகிறார். 

கடந்த 2013ம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அபாஸ்க்கு அப்போது தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட்டிருக்கிறது.

“எனது தந்தை, தாய், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் ஆகியோரை விட்டுவிட்டு நான் மட்டும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தேன். நான் மிக கடினமாக உழைத்து அவுஸ்திரேலியாவில் தொழில் செய்து வருகிறேன்,” எனகிறார் அபாஸ்.

அவரது வாகன உதிரி பாகங்கள் தொழிலை விரிவாக்கவும் மேலும் பலரை வேலைக்கு அமர்த்தவும் வேண்டும் என எண்ணுகிறார் அபாஸ். ஆனால், அவர் தற்காலிக விசாவில் உள்ளதால் வங்கி கடன் பெற முடியாது. இந்த நிச்சயத்தன்மையற்ற விசாவை கொண்டு அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்பைக் கோர இயலாது. அத்துடன் அவரது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஹசாரா இனத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் தாலிபானால் தாக்குதலுக்கு உள்ளாகும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

“எனது குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் அழைத்து எதாவது செய்ய சொல்கின்றனர். ஆனால், எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளேன்,” என வருந்துகிறார் அபாஸ்.    “ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியதால் நாட்டின் நிலைமை சீரடையவில்லை, அதனால் எங்களால் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி செல்ல முடியாது,” எனும் கூறும் அபாசை போல பல அகதிகள் அவுஸ்திரேலியாவில் நிச்சயத்தன்மையற்ற சூழலில் தவித்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியா அகதி கவுன்சில் கணக்குப்படி, தற்காலிக பாதுகாப்பு விசாவின் கீழ் 4 ஆயிரம் ஆப்கான் அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசின் கொள்கை மனிதாபிமானமற்றது எனக் கூறும் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக்கத்தின் முன்னாள் பேராசிரியர் ஜான் மின்ஸ், “உங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய கவலைப்பட வேண்டிய நிலையான பாதுகாப்பின்மை… பாதுகாப்பு மற்றும் நிரந்தரம் இல்லாத தற்காலிக விசாக்கள்… இது பகுத்தறிவற்றது,” என்று பேராசிரியர் மின்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த நான்காண்டுகளில் ஆப்கானிய அகதிகளுக்கு 15 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும் என அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அறிவித்திருந்தார். இந்த ஒதுக்கீடு கூடுதலான ஒதுக்கீடு அல்ல, அரசியல் தந்திரமிக்க ஒதுக்கீடு என விமர்சித்திருக்கிறார் பேராசிரியர் மின்னஸ்.

இவ்வாறான சூழலில், தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் தொடர்பான கொள்கையை மாற்ற முடியாது என உறுதியாக இருக்கிறது அவுஸ்திரேலிய அரசு.

“படகு வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதில் அவுஸ்திரேலிய அரசு உறுதியாக உள்ளது,” எனக் கூறியிருக்கிறார் அவுஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர்.

படகில் வந்த அகதிகள் நாட்டிற்குள் நுழையும் பயணமுறையின் காரணமாக “தண்டிக்கப்பட்டுள்ளனர்” என பேராசிரியர் மின்ன்ஸ் கூறியிருக்கிறார்.

Tamil News

Leave a Reply