இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா

F2FC5E3A 4806 478D BD81 0C812D57145E இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா

இலங்கையின் கடல்சார் கண்காணிப்பை அதிகரிக்க Beechcraft KA350 எனும் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில் சட்டவிரோதமாக படகு வழியாக இலங்கையர்கள் புலம்பெயருவது தொடர்ந்து வரும் நிலையில் இவ்விமானம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விமானத்தை வழங்குவதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீலின் கடிதத்தை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் ஒப்படைத்திருக்கிறார்.

முன்பு அவுஸ்திரேலிய வான் படையில் இருந்த இந்த விமானம் இனி இலங்கையின் எல்லைக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

“இந்த விமானம் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இலங்கையின் திறனை வலுப்படுத்தும். நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் நமது (இரு நாடுகளின்) நெருங்கிய ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுவதாக இது இருக்கும்,” என அவுஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் அண்மைக் கூற்றுப்படி, 2023ம் ஆண்டு பொறுத்தமட்டில் மொத்தம் இலங்கையைச் சேர்ந்த 43 சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு இருக்கின்றனர். அதே போல், கடந்த 2012 முதல் 2022 வரை அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயன்ற 1314 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.