ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த விமான கொள்முதல் கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் பெறப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை கொழும்பு ரிச்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) பரிசோதனைக் கருவியைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கிற்கு 10 மில்லியன் ரூபாய் நிதி மாற்றப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷ தலைவராகச் செயற்பட்ட ‘சிரிலிய சவிய’ அமைப்பின் மருதானை மற்றும் சுதுவெல்ல கிளைக் கணக்குகளுக்கு, எழுத்துப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த நிதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த சி.டி. ஸ்கேனர் கருவி சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை பின்னரே தெரியவந்தது.
அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி, குறித்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாமல் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அந்த நிதியின் தற்போதைய நிலை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய சேமிப்பு வங்கியின் அதிகாரிகள் மற்றும் குறித்த காலத்தில் பணியாற்றிய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பில் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



