ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்காக வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் (Marc-André Franche) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பதில் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் ரெக்கின் (Volker turk) அறிக்கைக்கு பதிலளிக்கும் இலங்கை அரசின் முழு அறிக்கையின் ஒரு பகுதியாக சட்டமா அதிபரின் பதில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கு தொடுநர் அலுவலகத்தை உறுதி செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, செப்டம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக் கொண்ட ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.
இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகியவையும் இதில் அடங்குகின்றன.



