உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் முயற்சி குறித்து கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

227 Views

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதற்கான ஒரு நாடகமாகவே தாம் கருதுவதாகவும், இதனை பாதிக்கப்பட்ட தரப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கிறார். 

நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு உள்ளக ரீதியில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள நிலையில், மேற்படி ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை (ஒக் 12) முன்னிலையாகியிருந்த இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்கால்க் தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.

மேலும் ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை (ஒக் 14) ஆஜரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் அது எவ்விடயங்களை பூர்த்தி செய்யவேண்டும் என்பது பற்றிய பரிந்துரைகளை முன்வைத்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  கருத்து தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தோல்வியடைந்த ஒரு பொறிமுறையென அதற்குத் தலைமைதாங்கிய டெஸ்மன்ட் டுட்டூ கூறியிருக்கின்றார்.

ஏனெனில், அதனூடாக குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வதற்காக அது பயன்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இவ்வாறான ஆணைக்குழுவின் ஊடாகக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படலாம். ஆனால், குற்றங்களை மூடி மறைப்பதற்காக அதனை பயன்படுத்தக்கூடாது என்பதே அவரது கருத்தாக இருக்கின்றது.

அதேபோன்று தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களின் போராட்டம் வெற்றியடைந்து, நிலைமாற்றமொன்று இடம்பெறும் இடைக்காலத்திலேயே இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில் அத்தகைய நிலைமாற்றம் எதுவுமில்லை. மாறாக, இங்கு இனப்படுகொலையின் ஊடாகப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அவ்வாறிருக்கையில், தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதனை குற்றவாளிகளை தப்பிக்கச்செய்வதற்கான ஒரு நாடகமாகவே நாம் கருதுகின்றோம். பாதிக்கப்பட்ட தரப்பினரும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யாமல், ஆனால், அதனை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பது போல காண்பித்து, சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியே இதுவாகும் என்று தெரிவித்தார்.

Leave a Reply