ஈரான் மீதான தாக்குதல் : நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதல் குறித்து ஜப்பான் மற்றும் பிற நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சியுடன் ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது ட்ரம்ப் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (மார்ச் 19) வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் இரு தலைவர்களின் இந்தச் செய்தியாளர் சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது, மேலும் இது குறித்துக் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் சந்திப்பில், அதிபர்  ட்ரம்ப்பிடம், ‘தாக்குதலுக்கு முன்பு, அது குறித்து ஜப்பான் போன்ற தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஏன் தெரிவிக்கவில்லை?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “ஒன்று, நாங்கள் அதிக சமிக்ஞைகளை கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்தபோது, மிகத் தீவிரமாகச் செயல்பட்டோம். நாங்கள் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லவில்லை, ஏனென்றால் நாங்கள் ஆச்சரியப்படுத்த விரும்பினோம். இத்தகைய ஆச்சரியங்கள் குறித்து ஜப்பானை விட நன்றாக அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள், சரியா?” என்று கூறினார்.

இதற்கிடையில், ட்ரம்ப் பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) குறித்தும் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் அமெரிக்கக் கடற்படைத் தளமான பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தியது.