நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கு ஏற்பாடு – வி.மணிவண்ணன்

97 Views

நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கு ஏற்பாடு

நாவலர் குருபூசை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

நல்லை குமரன் மலர் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஆரியகுளம் தொடர்பில் வரலாற்றாசிரியர்கள் எவரும் உரிமை கோரவில்லை என்ற கவலை எனக்குள்ளது. அந்த கவலை இன்று நீங்கியுள்ளது. ஆரியகுளம் தொடர்பாக குரல் கொடுக்குமாறு நான் பல வரலாற்றாசிரியர்களிடம் கூறியிருந்தேன். நான் ஒரு செவ்வியிலே ஆரியகுள வரலாறு பற்றி தெரிவித்திருந்தேன். நான் சொன்ன பின்னரே ஆரியகுளம் தொடர்பாக சர்ச்சைகள் உருவாகி இருந்தது.

இந்த சவால்களில் இருந்து என்னைப் பாதுகாக்க வேண்டியதும் என்னுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டியதும் சமூகப்பெரியார்களதும் சமூகத்தினதும் கடமையாகும். ஆரியகுளம் என்பது சிங்களவர் உடையது அல்ல. இது ஆரியச் சக்கரவர்த்திகளினுடைய குளமென நான் கூறியிருந்தேன். அதன் பின்னர் அவர்கள் உரிமை கோரி கடிதம் அனுப்புகின்றனர்.

நாங்கள் எங்கள் மரபுரிமைகள் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பயணங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது சில இடங்களில் இடையூறுகளை நாங்கள் சந்திக்கலாம். அதற்காக எங்களுடைய மக்கள் மத்தியில் இருந்து எமக்கு பெரும் ஆதரவு எமக்கு தேவைப்படுகின்றது. தனி ஒரு அரசியல்வாதியாக ஒரு பொறுப்பை தந்து விட்டு பொதுமக்கள் ஒதுங்கி நிற்க முடியாது. இதை நான் அன்போடும் உரிமையோடும் உங்களிடம் கேட்கின்றேன். எங்கள் செயற்பாடுகளுக்கு நீங்கள் பக்கத்துணையாக பயணிக்க வேண்டும்.

நாவலர் மண்டபம் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கின்றேன். யாழ் மாநகரசபை இந்த மண்டபத்தை சரியாக பராமரிக்க தவறியுள்ளது என்பதில் உண்மை இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

நாவலர் மண்டபத்தை பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக தனியான முகாமைத்துவ குழு ஒன்றை நாங்கள் சமூகப் பெரியார்களையும் உள்ளடக்கி செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். நாவலர் தமிழருடைய மரபுரிமைச் சொத்து.

எதிர்வரும் நாவலர் குருபூசை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதேபோன்று நாவலர் மண்டபத்தை புனரமைப்பதற்கான செலவு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஒரு கொடை வள்ளல் இதை புனரமைத்து தருவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார். இதனை புனரமைப்பு செய்ய சபையின் அனுமதி கிடைத்திருக்கிறது. அத்தோடு இந்த விடயங்களோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இதனை சரியாகப் பேணி பாதுகாப்பதற்கு முகாமைத்துவக் குழு ஒன்றை என்னுடைய காலத்திலேயே நியமிப்பதற்கு விரும்புகிறேன்.

எதிர்வரும் மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தில் நான் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் என்னால் செய்ய முடியாது. அதிலிருந்து நான் தப்பிப் பிழைத்தால் வருகின்ற பெப்ரவரி மாதம் வரை நான் இருந்து நாவலர் மண்டபத்தில் சிறப்பாக பராமரிப்பேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கு ஏற்பாடு – வி.மணிவண்ணன்

Leave a Reply