கிழக்கில் தொல்லியல் தொடர்பான செயலணி;குடிப்பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடு-கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள்

தமிழர் வடக்கும் கிழக்கும் தங்களுடைய தாயகம், அரசின் வடக்கு-கிழக்கு குடிப்பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடானது அவர்களுடைய சுயநிர்ணய அங்கீகாரத்தை அபாயப்பொறிக்குள் தள்ளியுள்ளது என கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கிழக்கில் முன்னெடுக்கவென அமைக்கப்பட்டுள்ள தொல்லியல் செயலணி தொடர்பில் அறிக்கையொன்றினை இன்று வெளியிட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தில் செயற்படும் சிவில் அமைப்புகள் இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்குமாகாண சிவில் சமூக அமைப்புக்கள் ஒருங்கிணைந்து, 02.06.2020 திகதி வெளியிடப்பட்ட இல. 2178/17 விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக உருவாக்கப்பட்ட தொல்லியல் மரபுரிமைகளை முகாமைத்துவப்படுத்தும் ஜனாதிபதியின் செயலணியையொட்டி எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

இச்செயலணி இனப்பிரதிபலிப்பில் ஓரினத்(சிங்கள) தன்மையை கொண்டுள்ளது. ஆனால் கிழக்கு மாகாணம் கலாச்சாரம்,இனம்,மதம் என்ற ரீதியில் பன்முக தன்மை கொண்டது என்பதுடன் தமிழ் மொழியே முதல்நிலை மொழி,சிங்கள மொழி அல்ல என்பதையும் வலியுறுத்துகிறோம்.

பொது தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் சூழலிலும் அத்துடன் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் சூழலிலும் இந்த நியமனம் செயலாக்கம் பெற்றுள்ளது. சிவில் அமைப்புகளாகிய நாங்கள் இந்த அறிக்கையை இச்சந்தர்ப்பத்தில் வெளியிடுவதில் உள்ள ஆபத்துக்களையும், இது மாற்றுக்கருத்துவாதிகளினால் கிழக்கில் இன-சமய முரண்பாடுகளை தோற்றுவிக்க ஒரு மூலோபாயமாக பயன் படுத்தப்படக்கூடும் என்பதையும் உணர்ந்தவர்களாவும் உள்ளோம்.

இதில் கையொப்பமிடும் நாங்கள் எவ்வகையிலும் ஏற்கனவே இன முரண்பாடுகளினால் பிளவுகள் உள்ள நாட்டில் மேலும் விரிசலை ஏற்படுத்த முனையவில்லை. வரலாற்றுப் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு, அவை எதிர்கால சந்ததியையும் அடையவேண்டும் என்ற நிலைப்பாட்டுடனும், தொல்லியல் வரலாறுதான் இத்தீவின் தனித்துவ தன்மையை வெளிப்படுத்தும்,என்ற நம்பிக்கையுடனும், இச் செயலணியானது இம்மாகாணத்தினுடைய பன்முகத் தன்மையை பிரதிபலிக்கவில்லை என்பதையும் இதை உருவாக்குவதன் உள்நோக்கம் பற்றியும் அக்கறை கொண்டுள்ளோம்.

1. பின்புலம்

இலங்கையில் தொல்லியல் ஆய்வுச் செயற்பாடுகள் சிக்கலுக்கும் தர்க்கத்துகுரியதாகவும் மாற்றுக்கருத்து கொண்டதாகவும் இயங்குகின்றன. இது அரசினுடைய செயற்பாடாக வடிவமைக்கப்பட்டு பெரும்பான்மை கலாச்சாரத்தினால் மேலாதிக்கம் பெற்ற ஒரு தனிக்குழும வரலாற்று செயற்பாடாக மாற்றப்பட்டுள்ளமை, இந்த நீரோட்டத்தில் இணைய முடியாத சக்தியற்ற குழுமங்கள் இணக்கப்பாடற்றோ அல்லது தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் அறிவை, விழுமியங்களை, முகாமைத்துவத்தடன் இணைந்த செயற்பாடுகளை,கலாச்சார பொருட்களை சவாலுக்குட்படுத்த முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழர் வடக்கும் கிழக்கும் தங்களுடைய தாயகம் என்றும்,அரசின் வடக்கு-கிழக்கு குடிப்பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடானது அவர்களுடைய சுயநிர்ணய அங்கீகாரத்தை அபாயப்பொறிக்குள் தள்ளியுள்ளது என்றும் கருதுகின்றனர்.

இச்செயலணியை கிழக்கு மாகாணத்திற்குமாக மட்டும் அமைத்திருப்பது கிழக்கு மாகாணத்தின் பாரம்பரியம் அபாய கட்டத்தில் உள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிப்பதுடன்,இச்செயலணியின் நியமனம் ஜனாதிபதி “புத்தசமய ஆலோசனை சபையை” சந்தித்ததன் பின்னர் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின் பின்புதான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இதன் பின்னணியில் கிழக்குமாகாண ஆளுனர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,பாதுகாப்பு பிரிவின் பிரதானி – ராணுவத்தளபதி, கடற்படை தளபதி,பதில் பொலிஸ் தலைமை அதிகாரி,தேசிய புலனாய்வு உயர் அதிகாரி, கிழக்கு மாகாண பாதுகாப்பு பிரிவின் தளபதி, இன்னும் சில பொலிஸ் ராணுவத்துடன் தீகவாபிக்கும் பொத்துவில் பிரதேசத்திற்கும் சென்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து,16 வைகாசி 2020 கடற்படை தளபதி பொத்துவில்லிலுள்ள முகுது மகா விகாரையையும் அதை சுற்றிய நிலப்பரப்பையும் பாதுகாக்கவென ஒரு கடற்படை பாதுகாப்பு நிலையத்தை நிறுவினார்.

2. செயலணியின் கட்டமைப்பு

இரண்டு புத்த பிக்குகள் வண.எல்லாவல மெத்தானந்த தேரர்,தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இணக்கப்பாடற்ற கொள்கை கொண்ட ஜாதிக ஹெல உறுமய,அரசியல் கட்சியின் ஸ்தாபகரும் அதன் தலைவரும்,வண. பன்னமுறே திலவான்ஷ தேரர் கிழக்கில் நாம் கண்கூடாக கண்ட சில செயற்பாடுகளின் காரணகர்த்தா, புல்மோட்டையில் பல முரண்பாடுகளின் மத்தியில் கட்டப்பட்ட புத்த கோயில்,கன்னியா பிள்ளையார் கோயில் பிரச்சனையில் அவர் வகிபாகம்,புல்மோட்டையில் புத்த விகாரைகள் நிர்மாணிக்க 500 ஏக்கர் காணியை அரசிடம் கோரியுள்ளார், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்தான் செயலணியின் தலைவர், மேல்மாகாண உயர் பொலிஸ் அத்தியட்சகர்,உள்ளீர்ப்பு வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் சந்திக்கும் அன்றாட ராணுவமயமாக்கலின் ஓர் அங்கமாக கணிக்கற்பாலானது.

அத்துடன் மேல்மாகாணத்தின் ஓர் உயர் பொலிஸ் அதிகாரியை கிழக்குமாகாண செயலணி ஒன்றிற்கு நியமிப்பது எப்படி நியாயப்படுத்தமுடியும்,செயலணியில் களனிய பல்கலைகழகத்தின் பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவவின் நியமனம். இவர் மன்னார் புதைகுழியின் அகழ்வை கண்காணித்ததுடன் அதில் அவரின் கண்டுபிடிப்புகளின் முடிவுகள் வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பின்நோக்கி நகர்ந்ததையும் இதன் பின்னணியில் அவருடைய உள்நோக்கங்களையும் உற்று நோக்குமிடத்து அவரின் நியமனம் கேள்விக்குறியாகிறது.

இச்செயலணி ஒரே இன,மத, மொழி குழும அங்கத்தினரை கொண்டுள்ளதால் அவர்கள் பெரும்பான்மை சமூக நிகழ்ச்சி நிரலில் செயற்படக்கூடும். அத்துடன் இத்தீவின் தொன்மைவாய்ந்த தமிழ் நாகரிகங்களை மறுத்தும் செயற்படமுடியும். அரசினால் நிதி முதலீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களது வரலாற்று வடிவத்தை முன்நோக்கி நகர்த்த பயன்படும்.

மேலும் இது செயலணியின் நடுநிலை தன்மையையும் கேள்விக்குட்படுத்துகின்றது. செயலணிக்கு தனியார் துறை ஊடக (தெரண) நிறுவனம் ஒன்றின் தலைவரினதும் நியமனம் கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் ஆதங்கங்களை தோற்றியுள்ளதுடன் இதன் மறைமுக நிகழ்ச்சி நிரல் பற்றிய ஐயப்பாட்டையும் தோற்றுவிக்கிறது.

பெரும்பான்மைவாதத்தை மையப்படுத்திய அரசியல் கலாச்சாரம் கடந்த ஜனாதிபதி தோதலில் கொடுக்கப்பட்ட ஆணையை மையப்படுத்தி பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கான தீர்மானங்களை எடுக்கலாம் என்ற கருத்திற்கு வித்திட்டுள்ளது. இது பிரச்சினைக்குரியதாகவும் சிறுபான்மை குழுமங்களை புறந்தள்ளவும் ஏதுவாகின்றது.

பிரத்தியேக அணுகுமுறை பெரும்பான்மை ஜனநாயகத்தை வலுப்படுத்தி எண்ணிக்கையில் சிறுபான்மையான குழுமங்களை பலவீனப்படுத்தியுள்ளது. இலங்கை சமாதான மீள்இணக்க முயற்சிகளில் முன்னேறி ஒரு இணைந்த நாட்டை கட்ட வேண்டுமானால் பெரும்பான்மையை மையப்படுத்திய ஜனநாயகம் கட்டவிழ்ப்புச் செய்யப்பட்டு மீள் கட்டுமானம் செய்யப்படவேண்டும்.

3. ஒற்றை வரலாற்றியல் கட்டமைப்பு

சிறிலங்காவின் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம்,சமயம், மொழி, இனம் அது நிலை கொண்டிருக்கும் பூகோள மைய கேந்திரம், அதனுடைய ஆசியாவின் தன்மையை பிரதிபலிக்கிறது. சிறிலங்காவின் கலாச்சாரம் என்று ஒற்றைக் கலாச்சாரத்தை மட்டும் பிரதிபலிப்பது சிறிலங்காவின் பன்முகத் தன்மையை நிராகரிப்பதாகும்.

பேராசிரியர் ஜகத் வீரசிங்க கூற்றுப்படி ஆகக்குறைந்தது பத்து தமிழ் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர் என்றும் அதில் சிலர் மட்டக்களப்பில் வேலை செய்கிறார்கள் என்றும்,கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் முஸ்லிம் துறைசார் நிபுணத்துவம் கொண்டோரை இச் செயலணியில் உள்ளீர்க்காமையும் இச்செயலணியின் பெரும்பான்மை குழுமம்சார்ந்த அக்கறையை மேலோங்க செய்யும் செயற்பாடாகும்.

அத்துடன் கிழக்கு வாழ் தமிழரின் வரலாற்று தடயங்களை மறுதலிக்கும் செயற்பாடும் ஆகும். வடக்கு-கிழக்கின் வாழ்வியல் சார்ந்த அனுபவம் கூறுவதென்னவென்றால், புதைபொருள் அகழ்வின் கண்டுபிடிப்புகள் தமிழ் முஸ்லிம் சமூகத்தை இடம்பெயரச்செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதாகும். இவ்வாறாக இந்த இடங்கள் அரசினால் பறிக்கப்பட்டு புத்தசமய பாதுகாப்பு இடங்களாக மாற்றப்படுவதாகும்.

சிறிலங்காவில் புத்தசமயம் முழுமையாக சிங்களவருக்குரியது என்னும் பெரும்பான்மை சமூகத்தின் கருத்தியல், கடந்து போன வரலாற்றில் தமிழரும் புத்த சமயத்தவராக வாழ்ந்தவர்களே என்பதை ஏற்க மறுப்பதாகும்.

தமிழ் பௌத்தரும் சிறிலங்காவில் வாழ்ந்தார்கள் என்பதை பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். சமயத்தை அரசியல் மயமாக்காது செயற்படுவது கிழக்கில் வன்முறையை தவிர்ப்பதுடன் இன ஒற்றுமையை பேணவும் வழி சமைக்கம்.

4. நிலப்பரப்பின் ஒருமைப்பாடு

தமிழ் மொழியையும் நிலப்பரப்பு தொடர்பையும் கருத்தில் கொண்டு 1987ல் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா-இந்திய ஒப்பந்தம் வடக்கு-கிழக்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் என ஒரு அலகாக இணைத்தது. ஆனால் பெரும்பான்மை அரசியல் தலைமைத்துவம் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் நிலப்பரப்பின் ஒருமைப்பாட்டை மீள்கட்டமைத்தது.

மேலும் இச்செயலணியின் நியமனத்தினால்,கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குகளினால் அதிகாரத்திற்கு வந்த அரசு பெரும்பான்மை சமூகம்சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்குää அரசியல் நிகழ்ச்சி நிரலில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற அச்சமும் எம் மத்தியில் மேலோங்கியுள்ளது. ஏற்கனவே மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் “டு” வலயத்தினூடாக வடக்கையும்-கிழக்கையும் இணைக்கும் எல்லைப் புறத்தில் “வெலிஓயா” உருவாக்கப்பட்டு நிலப்பரப்பு துண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது பெரும்பான்மையின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்தும் ஒரு உதாரணமாகும்.

5. இராணுவமயமாக்கல்

கடந்த யுத்தத்திலும் அதன் பின் 2009 பிற்பட்ட காலப்பகுதியூடாகவும் சிறிலங்கா அரசு புலிகளை வென்ற பின்பும்,வடக்கு-கிழக்கு செறிவாக இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. “தினமும் இராணுவமயமாக்கல்”, வடக்கு-கிழக்கு தமிழரின் வாழ்வின் அடிப்படைநிலைகளில் ஒன்றாகிவிட்டது.

இராணுவமயமாக்கல் சிவில் நிர்வாகத்தில் மட்டும் ஊடறுக்கவில்லை மாறாக முரண்பாடுகளை கையாள செயற்படும் கலாச்சாரமாகவும் மாறி அவசர காலத்திலும் யுத்தகாலத்தற்கும் அப்பால் சாதாரண சூழலிலும் சிவில் நிர்வாகிகள்,சட்ட அமுலாக்க அலுவலர், நீதித்துறையையும் ஊடுருவியுள்ளது.

சிறிலங்கா ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றதா என்ற ஐயப்பாடு தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகிறது. பல தசாப்தங்களாக வடக்கும் கிழக்கும் இராணுவமயபடுத்தப்படுதலை தமிழ் முஸ்லிம் சமூகம் பல நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருந்தும் இது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற நிலையிலேயே உள்ளது.

6. பரிந்துரைகள்

அ. சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும் கிழக்கு மாகாணத்தில் சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்த இச் செயலணியை கலைப்பது

ஆ. இந்த செயலணியின் செயற்பாடுகளை உள்ளுர் ஆட்சி மன்றான மாகாண சபைக்கு ஒப்படைத்து தொல்லியலுக்கென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு பல்கலை கழகத்திலுமுள்ள துறைசார் நிபுணரின் உதவியுடன் பாதுகாத்து பராமரிப்பது ஏற்புடைத்தானது.

இ. மாகாணசபை பல்முக கலாச்சாரத்தையும், மாகாண சமூகங்களின் உரிமையையும், சமூகங்களின் தனித்துவ வரலாற்று உரிமைகளுக்கு மதிப்பளித்தும்ää கிழக்கு மாகாண தொல்லியல், கலாச்சார மரபுகளையும் மதித்தும் செயற்படும் ஒரு பொறி முறையை உருவாக்குதல்.

இந்த நடைமுறை இந்த பிராந்தியத்தில் சக வாழ்வை மேம்படுத்தி பரஸ்பர உறவை வலுப்படுத்துவதாய் அமையும்.

               கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புக்கள்