இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அனுரா தனது முதல் சிறப்புரையில் கருத்து

இன வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வராமல்  நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரிவினை யுகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவோம் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க  நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தனது உரையில்,

ஒருவர் தன்னை  சிங்களவர் தமிழ் முஸ்லீம் என அடையாளம் காண்பதற்கு அப்பால் அனைவரும் நாங்கள் இலங்கையர்கள் என பெருமையுடன் அனைவரும் தெரிவிக்கும் நிலை வரும்வரை நாடு முன்னேற முடியாது. இதற்கு அவசியமான அரசமைப்பு பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை  நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம். பன்முகத்தன்மையை மதிக்கும் ஐக்கியப்பட்ட இலங்கையை உருவாக்குவதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்துகின்றோம் இந்த திட்டம் இனமதம் வர்க்கம் அடிப்படையிலான பிளவுகளின் யுகத்தினை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டது.

மேலும் வாழ்க்கைச் செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும் -கடன் மறுசீரமைப்பு பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்வேன்.

அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக அரசாங்கம் உரிய கடன்வழங்குநர்களுடன் இந்த திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும் உரிய கடன் நிவாரணத்தை பெறுவதற்காகவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்.

இந்த நாட்டு மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை எங்களால் பெறமுடியும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம், இந்த கூட்டு ஆதரவின் மூலம் வெற்றியை பெற முடியும் என கருதுகின்றோம்.

மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்காததால் நாடாளுமன்றத்தை கலைத்தேன். மக்களின் விருப்பத்தை தெளிவாக பிரதிபலிக்கின்ற நாடாளுமன்றம் எங்களிற்கு அவசியம். தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தினை பிரதிபலிக்கவில்லை. இதன் காரணமாக அதனை கலைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தேன்.

எங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலும் நாட்டை அரசமைப்பின்படி வழிநடத்தவும் அமைச்சரவை நியமிக்கப்பட்டது.

எனது நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் என்னை பற்றி காணப்படும் சந்தேகங்களை போக்குவேன்.  நான் மக்களின் நம்பிக்கையை பெற தீர்மானித்துள்ளேன். ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தயார். சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக உங்களை எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்கள் ஒரே இலக்குகளை பகிர்ந்துகொள்வதை நீங்கள் காண்பீர்கள். நாங்கள் இணைந்து இந்த நாடு எதிர்கொண்டுள்ள சவால்களிற்கு முகம் கொடுக்கலாம்,முன்னோக்கி நகர்வதற்கான உரிய மூலோபாயத்தை முன்னெடுக்கலாம். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உண்மையாகவும் சாதகமாகவும் அர்ப்பணித்துள்ளவர்களிற்கு எங்களின் கதவுகள் திறந்துள்ளன.தமது பிள்ளைக்கு நல்ல பாடசாலை மற்றும் சிறந்த கல்வியை வழங்க அந்த ஒவ்வொரு பெற்றோருக்கும் உரிமை உண்டு. அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கவும், அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும்  நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்   என்றார்.