மாகாண நிழல் அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நியமனம் : கஜேந்திரகுமார் கடும் விசனம்

மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில்  மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது குறித்து யாழ் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் ஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளாத்.

மேலும் ‘சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இது  முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு. மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் .மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற  நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சட்டவிரோதமாக தையிட்டியில் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் நேற்று ( நேற்று முன்தினம்) ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டவிரோத தையிட்டி விகாரை  விகாராதிபதி அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் சட்டவிரோதமாக காணிகள்  பறிக்கப்பட்ட பொதுமக்கள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்படவில்லை.

இந்த செயற்பாடு  எவ்வாறான நீதி நடவடிக்கையாக அமையும் என்று கேட்கிறேன். திஸ்ஸ விகாரை  சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்பட்டது. புத்தசாசன அமைச்சுக்கோ அல்லது அரச நிறுவனங்களுக்கோ அறிவிக்காமல் தான் இந்த விகாரை கட்டப்பட்டது. முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா  இந்த சட்டவிரோத செயற்பாட்டில் முன்னின்று செயற்பட்டார்.

இராணுவ ஆட்சிக்கான ஒரு அடையாளமாக இந்த விகாரை சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டது. அகில இலங்கை  பௌத்த காங்கிரசின் தலைவர்  வாகிஸ்ட என்பவர் யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அச்சுறுத்தும் வகையில் இந்த விகாரை குறித்து கடிதம் எழுதியுள்ளார்.இவர் ஓய்வுப்பெற்ற புலனாய்வு அதிகாரி.இது எவ்வகையான இராணுவ மயமாக்கல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இது அரசாங்கத்தின் செயற்பாடல்ல, இனவாதத்தின் மிக மோசமாக முகம். இதற்கும் பௌத்த மதத்துக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை.தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை செய்த இராணுவம் அதே மனநிலையில் இருந்துக் கொண்டு இந்த விகாரையை கட்டியது. இந்த விடயத்தை  அரசாங்கத்துக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசாமல் ஒரு  தரப்புடன் மாத்திரம் பேசுவது எந்தளவுக்கு நியாயமானதாக அமையும்.

தேசிய ஒருமைப்பாடு அமைச்சு எவ்வாறு இதற்கு அனுமதிக்கும். தயவு செய்து இந்த அநீதியை செய்யாதீர்கள்  என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுக் கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.சட்டவிரோத திஸ்ஸ விகாரை விவகாரத்தில் அரசாங்கம் எவ்விதமான தயக்கமின்றி உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.கடந்த அரசாங்கங்களை போன்று மோசமான செயற்பாடுகளுக்கு விலைபோக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கடந்த 10 ஆம்  திகதி  மாகாண சுகாதார அமைச்சின் கூட்டம் நடைபெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீ பவானந்தராஜா  அந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்குக்கு  வந்த போது நிழல் மாகாண  அமைச்சர்களை  நியமிக்க   வேண்டும் அவர்கள்  கூட்டங்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்று ஆளுநருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்  கொள்கிறேன்.

சுகாதாரத்துக்கு  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா, கல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்கள் சபைக்கு   பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், விவசாயம் மற்றும் கால்நடைக்கு பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன்  என்ற அடிப்படையில் மாகாண நிழல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மாகாண சபைகள் இல்லாத நிலையில் வடக்கில் ஏதேனும் கூட்டம் இடம்பெறுமாயின் அதற்கு சகல கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும். எவ்வாறு ஸ்ரீ பவானந்தாராஜாவை மாத்திரம் அழைக்க முடியும். இந்த அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது.அரசாங்கம் ஒருபுறம் மாகாண சபைத் தேர்தலை  தொடர்ந்து பிற்போடுகிறது. மறுபுறம் ஜனநாயக விரோதான முறையில்  தமது உறுப்பினர்களை  நியமித்துள்ளது.  பிரஜா சக்தி முறைமையை அரசியலாக்கியுள்ளது. .இது முதுகெலும்பு இல்லாத கேவலமானதொரு நிலைமை.மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்பு என்று இவர்கள் உலகுக்கு காட்டினார்கள். ஆனால் தற்போது திருட்டுத்தகமான மாகாண சபைக்கு தமது உறுப்பினர்களை நிழல் அமைச்சர்களாக நியமித்துள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான நிமலன் இன்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுகிறது. அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதை அறிந்துள்ள சிறையதிகாரிகள் வழக்குக்காக அவரை கொழும்பில் இருந்து வெளி மாவட்டத்துக்கு கொண்டு சென்று உடனடியாக கொழும்புக்கு கொண்டு வருகிறார்கள். பல வருடகாலமாக இந்த நிலைமையே  காணப்பட்டது..

ஆனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய சிறை அதிகாரி வழக்கத்தை மாற்றி நிமலனுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் வெளிமாட்ட சிறைகளில் அவரை தடுத்து வைத்து வழக்கு விசாரணைக்கு வரும் போது மாத்திரம் அவரை கொழும்புக்கு கொண்டு வருகிறார்கள். தயவு செய்து இந்த அநீயாயத்தை செய்யாதீர்கள்.அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட வேண்டும்.

மொரிஸ் என்பவர் தொடர்பில் வழங்கிய குற்றப்பத்திர வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் பொலிஸார்  அவருக்கு எதிராக பிறிதொரு வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள். இது மிகவும அநீதியானது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தீர்கள். ஆகவே தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள் என்றார்.