வரவு செலவு திட்டம் என்பது வெறுமனே வரவு செலவுத்திட்டம் மட்டும் கிடை யாது. அன்றைய உரையில் சொல்லப்படும் கவர்ச்சிகர மான திட்டங்களைத் தாண்டி, வருமானத்துகான மூலங்கள், நேரடி மறைமுக வரிக்கான திட்டங்கள், கையிருப்பு மிகுதி, கடன் மீள் செலுத்தல், ஏற்றுமதி இறக்குமதி என பலவற்றை சேர்த்தே விளங்கிக்கொள்ள வேண்டியிருந்தாலும் எதிர்கால அரசியல் நோக்கங்களும் அந்த உரையில் கோடிட்டு காட்டப் படும்.
அந்த வகையில் இலங்கையின் 79ஆவது வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திச நாயக்க கடந்த திங்கட்கிழமை (17/02/2025) பாராளு மன்றத்தில் முன்வைத்தார்.
டிஜிற்றல் பொருளாதாரம் தொடக்கம் கிளின் ஶ்ரீலங்கா வரையுமான பல்வேறு திட்டங் களுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டதுடன் முக்கியமாக கல்வி, சுகாதார விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதை இதில் அவதானிக்க முடிகிறது.
நீண்ட காலமாக 75 வருடங்களாக உரி மைக்காக போராடும் வடகிழக்கு தாயகத்தை பொறுத்தவரை ஏனைய அரசாங்கள் கடந்த காலங்களில் ஒதுக்கிய நிதிகளை விட சற்று கூடுதலான நிதிகள் வடமாகாணத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ளதை பார்க்கலாம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தை புறக் கணித்து வடமாகாணத்தை முதன்மை படுத்தி இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது என்பதே உண்மை. கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வடமாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஐந்து தமிழர் தெரிவானதற்கு நன்றிக் கடன் செலுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை. அநுராவின் திசைகாட்டி கிழக்கிற்கு திசைகாட்ட வில்லை.
கடந்த 1981 யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய வடுவாகும் இது 1981,யூன்.01,இரவு சிங்கள வன்முறைக் கும்பலால் நடந்தது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.
இந்த கலாசார அழிப்பு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம்கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களு டன் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந் த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசா நாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. இந்த நூலக எரிப்பு தொடர்பாக கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும், ஜனாதிபதியாக தெரிவாகி கடந்த மாதம் 2025, ஜனவரி,31இல் யாழ்ப்பாணத்துக்கு பயணம் சென்ற வேளையிலும் யாழ் நூலகம் தேர்தல் அரசியலுக்காக அப்போதய ஆட்சியாளர்களால் எரிக்கப்பட்டதாகவும் தேர்
தலுக்காக ஒரு நூலகம் எரிக்கப்பட்ட கறைபடிந்த வரலாறு யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு நாம் நியாயம் வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கும், நூலகத்துக்குமிடையில் நெருங் கிய தொடர்புண்டு. அந்த நூல் நிலையத்தை மேம் படுத்துவதாகவும் குறுப்பிட்டார்.
அந்த கூற்றை இந்த வரவு செலவுத்திட்டத் தில் யாழ் நூல் நிலைய அபிவிருத்திக்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதை பார்க்கலாம்.அதேபோன்று வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன், வடக்கு மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன், காங்கேசன் துறை மாங்குளம் உட்பட கைத்தொழில் பூங்கா அமைக்க 5 மில்லியன்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை செப்பனிட ஆரம்ப கட்ட நிதியாக 1000 மில்லியன்,
வடமாகாணத்தில் கிராமிய வீதிகள் பாலங்கள் அமைக்க 50 மில்லியன், பரந்தனில் கைத்தொழில் பேட்டை வடக்கு கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணிப்புக்கு 7500 மில்லியன் என வடமாகாணத்தை குறிவைத்து பல கோடி மில்லியன் நிதிகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
எனினும் மிதமிஞ்சிய இராணுவ ஆளனியுடன் இருக்கும் இலங்கையில் 11 வீதம் இராணு வத்துக்காக 442 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி ஒதுக் கிய அதே வேளை “இலங்கையர் தினம்” (Srilanka Day) என்ற பெயரில் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஷ்லிம், பறங்கியர் என 24 மாவட்டத்தில் உள்ள மக்களுடைய கலை பண்பாடு உணவுப்பழக்க வழக்கம் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சங்கமித்து இலங்கையர் நாம் என்ற உணர்வை வளர்பதற்காக அந்த தேசிய நிகழ்வு கொண்டாட்டத்தை இந்த வருடம் 300 மில்லியன் அக்டோபர் மாதமளவில் நடத்த ஜனாதிபதி திட்ட மிட்டுள்ளார்.
இதன் நோக்கம் இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக போராடும் வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய உணர்வுகளை சிதைத்து குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நாம் இலங்கையர் ஒரேநாடு சமத்துவம் என்ற எண்ணக்கருவை வளர்ப்பற்கான ஆரம்ப நடவடிக்கை இதுவாகும்.
2025இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக் கும் இந்த மாபெரும் கண்காட்சியுடன் கூடிய இனமத மொழி வேறுபாடுகள் இல்லாத இந்த விழா ஒவ் வொரு ஆண்டும் தொடரப்போகின்றது. இதன்மூலம் வடகிழக்கு தாயகம் என்ற தமிழ்த் தேசிய அரசியல் ஊட்ட ஈழத்தமிழர்களின் சிந் தனை நாம் இலங்கையர் என்ற சிந்தனைக்கு மூளைச்சலவை செய்வதற்கான வெள்ளோட்டமே இது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.