பணம் தூயதாக்கல் தடைச் சட்டம் வடக்கு, கிழக்கு மக்களை பாதிக்கும் – கஜேந்திரகுமார்

பணம் தூயதாக்கல் தடை சட்டம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் சட்டம்  மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டம் ஆகிய சட்டங்கள்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  சிவில் அமைப்புகளையும் அந்த அமைப்புகள் மூலம் உதவிகளை பெறும் மக்களையுமே பாதிப்புள்ளாக்கும். இந்த சட்டங்களில் நெகிழ்ச்சித் தன்மையை கடைப்பிடிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்  என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (09) நடைபெற்ற  பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பணமோசடியையும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதையும் தடுப்பதன் அவசியத்தை எந்த உறுப்பினரும் மறுப்பதில்லை. எமது நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதும், நிதி நடவடிக்கை பணிக்குழு நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்கச் செயற்படுவதும் இலங்கையின் சர்வதேசக் கடமையாகும். அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறினால், சர்வதேச நிதி அமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும், அதன் சுமையை இறுதியில் சுமப்பது எமது மக்களே.

இன்று நாம் தீர்மானிக்க வேண்டிய கேள்வியானது நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தரநிலைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதல்ல. அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை