இலங்கையில் ஒரு தனிநபருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.13,810 அடிப்படை வாழ்க்கைத் தரத்திற்கு தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செப்டெம்பர் மாதத்தில், அடிப்படைத் தேவைகளுக்காக ஒரு தனிநபருக்கு ரூ.13,772 தேவையென என திணைக்களம் தீர்மானித்தது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின் படி , கொழும்பில் வசிக்கும் ஒரு நபருக்கு அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.14,894 தேவைப்படுவதாகவும், மொனராகலையில் வசிக்கும் ஒருவருக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்குள் ரூ.13,204 தேவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது இலங்கையில் மொனராகலை மலிவான மாவட்டமாகக் கருதப்படும் அதேவேளை கொழும்பு வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு சராசரியாக மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ரூபா 55,240 தேவைப்படும் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.