அமெரிக்காவின் உண்மையான நிறம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது : இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

வெனிசுலா குடியரசின் இறையாண்மை மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் மூலம் அமெரிக்கா உலகளாவிய பயங்கரவாத முரட்டுத்தனமான நாடு என்ற அதன் உண்மையான நிறத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

வெனிசுலா குடியரசின் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெனிசுலாவின் பொலிவேரிய குடியரசின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கடத்தியதை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அமெரிக்காவின் இந்த சர்வதேச கொள்ளைச் செயல், ஹைட்டி ஜனாதிபதி ஜீன் பெர்ட்ரண்ட் அரிஸ்டைட்டை கடத்தியமை மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசின் பிரதமர் பேட்ரிஸ் லுமும்பாவை படுகொலை செய்தமையுடன் ஒத்துப்போகிறது. இந்தச் செயலின் மூலம், அமெரிக்கா உலகளாவிய பயங்கரவாத முரட்டுத்தனமான  நாடு என்ற அதன் உண்மையான நிறத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

வெனிசுலாவின் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது வேண்டுமென்றே  குண்டுவீச்சு நடத்தியதை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. குண்டு தாக்குதலானது வெனிசுலா மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் நல்வாழ்வுக்கும் அவசியமான வசதிகளை வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம்  பொது மக்கள் உயிரிழப்பு என்பதுடன் மிகவும் கஷ்டத்துடன் போராடி வரும் பொதுமக்கள் மேலும் சிரமங்களு ஆளாகி இருக்கின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள் 2003 ஆக்கிரமிப்புக்கு முன்னர் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகளை முறையாக அழிப்பதற்கு ஒத்திருக்கிறது. பொதுமக்கள் உள்கட்டமைப்பு வசதிகளை வேண்டுமென்றே குறிவைப்பது சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுவதுடன், நிறுவப்பட்டுள்ள உலகளாவிய விதிமுறைகளின் கீழ் யுத்தக்குற்றத்தின் வரையறையை பூர்த்தி செய்கிறது.

இந்த அக்கிரமிப்பு ஐக்கிய அமெரிக்காவினால் வரலாற்று ரீதியாக பின்பற்றப்படுகின்ற விரிவான ஏகாதிபத்திய நோக்கங்களில் இருந்து பிரிக்க முடியாதது. உலகின் மிகப்பெரிய, நிரூபிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு வெனிசுலாவுக்கு இருக்கிறது.

இது நீண்ட காலமாக மூலோபாயமாக எரிசக்தி வளங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் வெளிப்புற சக்திகளின் கவனத்துக்கு உள்வாங்கப்பட்டிருந்த ஒரு விடயமாகும். எண்ணெய் அணுகல், புவிசார் அரசியல் ஆதிக்கம் மற்றும் அமெரிக்க தேவைப்பாடுகளுக்கு சாதகமான உலகளாவிய நிதி போக்கை பாதுகாத்தல் உள்ளிட்ட  ஈராக் ஆக்கிரமிப்புக்கு சமமான நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டுள்ளதாக  ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். தற்போதைய சூழலில், போலி போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட சொல்லாட்சி, வெனிசுலா மீதான தாக்குதல்களில் தலையிட ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி வருகிறது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் காரணங்களை கடுமையாக நிராகரிப்பதுடன், வெளிப்புற தலையீடுகளுக்கு எதிராக இருந்து இறையாண்மையைக் காக்கும் வெனிசுலா மக்களுடன் ஒத்துழைப்புடன் நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எதிராகவும், வெனிசுலாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காகவும் எழுந்து நிற்குமாறு அனைத்து ஜனநாயக மற்றும் அமைதியை விரும்பும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இறையாண்மையை மதித்தல், அமைதியான சகவாழ்வு மற்றும் ஏகாதிபத்திய தலையீடுகளை எதிர்த்தல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக்கொண்ட, அணிசேரா நாடுகளின் பெருமைமிக்க பாரம்பரியத்தை இலங்கை வரலாற்று ரீதியாகப் பாதுகாத்து வருகிறது. அந்த உணர்வில், இந்த ஆக்கிரமிப்புச் செயலைக் கண்டித்தும், உலக சக்திகளின் அழுத்தங்கள் எதுவும் இன்றி, ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கான நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொள்கை ரீதியான  நிலைப்பாட்டை எடுக்குமாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெனிசுலா மக்களுக்கு தங்களது அசைக்க முடியாத ஒத்துழைப்பை மீண்டும் சுட்டிக்காட்டுவதுடன் சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும்  இனங்களின்  இறையாண்மையுள்ள உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிராக இருக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறது.