‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகள் முஸ்லீம்களின் உரிமைகளைப் பறித்துள்ளதாக குற்றச்சாட்டு

இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தமது செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை கையளித்திருந்தார்.

எட்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 43 பரிந்துரைகள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்தே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி உருவாக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, ‘அரசப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு, அவர்களின் கணவரை இழந்தால் வழங்கப்படும் ‘இத்தா’ காலத்துக்குரிய 4 மாதங்கள் 10 நாட்களைக் கொண்ட விடுமுறை இல்லாமலாக்கப்பட வேண்டும்’ எனவும் – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.