அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்ப தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரளுமாறு அழைப்பு

அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்ப

அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்ப தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரளுமாறு அழைப்பு

அரசாங்கத்தினை கண்டிக்கும் முகமாகவும், வீட்டிற்கு அனுப்புகின்ற செயற்பாட்டின் ஆரம்பமாகவும், தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தினுடைய பொருளாதார நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராகவும், விலை உயர்விற்கு எதிராகவும் , பொருளாதாரத்தை சீரழிப்பதற்கு எதிராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நாளை (26) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருப்பதாகவும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு தமிழ் தேசத்தின் குரல் ஓங்கி ஒலிக்க போராட்டத்திற்கு வருகை தர வேண்டும்.

இலங்கையிலே பொருட்களின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. பொருளாதாரம் அதளா பாதாளத்திற்குள் சென்றுவிட்டது. ஒரு பவுன் தங்கம் ஒன்றரை இலட்சம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு லட்சம் இதுதான் அரசாங்கத்தினுடைய நீதி. மக்கள் ஒருநேர கஞ்சிக்கு கூட கையேந்துகின்ற நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இனப்படுகொலையால் வஞ்சிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட தமிழ் தேசம் குறிப்பாக வட கிழக்கு பொருளாதார நெருக்கடியால் மேலும் திணறி கொண்டிருக்கின்றது.

வடகிழக்கில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மீண்டும் ஒருமுறை செல்ல தொடங்கியிருக்கின்றார்கள். இனியும் நாங்கள் அமைதி காத்தால் இந்த அரசாங்கம் நிலபுலங்களை விற்பது போல மக்களையும் விற்க தொடங்கி விடுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.