படலந்த வதை முகாம் மாத்திரமல்ல, 1971ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய வேண்டுமெனில், அவை தொடர்பில் ஆணைக்குழுக்களை அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
புதன்கிழமை (12) கண்டி மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமயிலான பொதுஜன ஐக்கிய முன்னணி நாடளாவிய ரீதியிலுள்ள சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் கதிரை சின்னத்தில் களமிறங்கவுள்ளது.
புதிய அரசியல் குழுக்கள் பல எம்முடன் இணைந்துள்ளன. கடந்த தேர்தல்களில் பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஏனைய பல கட்சிகளில் போட்டியிட்டவர்கள் இவ்வாறு குழுக்களாக எம்முடன் இணைந்துள்ளனர்.
தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்து கொண்டால் உண்மையான நிலைவரம் வெளிப்படுத்தப்படும்.
தேர்தல் காலங்களில் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கம் நிறைவேற்றாமையே இதற்கான பிரதான காரணியாகும். இதனால் மக்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அதற்கான பதிலை வழங்க அவர்கள் காத்திருக்கின்றனர். இந்தத் தேர்தலில் ஏமாற்றமடைவதற்கு மக்கள் தயாராக இல்லை.
தற்போது பேசுபொருளாகிய படலந்த வதை முகாம் மாத்திரமல்ல, 1971ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய வேண்டுமெனில், அவை தொடர்பில் ஆணைக்குழுக்களை அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
நாட்டில் பல சந்தர்ப்பத்தில் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக பல அரச உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதற்காகவேனும் ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.



