ஏழு ஆண்டுகளுக்குப் பின் சவூதிக்கு தூதுவர் ஒருவரை நியமித்தது ஈரான்

ஏழு ஆண்டுகளின் பின்னர் சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவரை ஈரான் அறிவித்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் நேற்று (24) செய்தி வெளியிட்டது.

முன்னர் குவைட்டுக்கான ஈரான் தூதுவராக இருந்த அலி ரேசா எனயாத்தி புதிய சவூதி தூதுவராக அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சருக்கான உதவியாளர் மற்றும் வெளியுறவு அமைச்சின் வளைகுடா விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி இர்னா டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போட்டி நாடுகளாக உள்ள சவூதி மற்றும் ஈரான் சீனாவின் மத்தியஸ்தத்துடன் கடந்த மார்ச் 10 ஆம் திகதி இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஆரம்பிக்க இணங்கின.

டெஹ்ரானில் உள்ள சவூதித் தூதரகம் மீது 2016 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இரு நாட்டு உறவுகளும் முறிந்தன. ஷியா மதத் தலைவர் ஒருவருக்கு சவூதி மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்தே அந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.