இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி நிறுவனம் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக இந்தியாவின் முன்னணி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் தொடர்பாக அதானி நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின்னாலை அமைக்கும் திட்டத்திலிருந்து, கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி நிறுவனம் அண்மையில் எழுத்துப்பூர்வமான அறிவிப்பொன்றை வழங்கியது. இருப்பினும், இந்த திட்டத்தை முழுமையாக நிறுத்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டணங்கள் குறித்து பரஸ்பர உடன்பாட்டை எட்டிய பின்னர், ஜூன் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம் என்று அந்த செய்தித்தாள் தனது அறிக்கையில்; சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், குறித்த செயற்திட்டம் தொடர்பில் இந்தியாவில் உள்ள அதானி நிறுவனம் இதுவரையில் கலந்துரையாடவில்லை என்றும் இலங்கையில் உள்ள அதன் துணை நிறுவனத்துடனேயே கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக இலங்கை மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.



