அரசியல் கைதிகள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருக்கும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அதற்காக ஓரிரு மாதங்கள் எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாத்தில், உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றுகையில் எழுப்பிய கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதாக நாங்கள் எமது கொள்கை உரையிலும் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.என்றாலும் அதனை ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் செய்வது கடினம்.
அதனால் சம்பந்தப்பட்ட சட்ட பிரிவினருடன் கலந்துரையாடி மிக விரைவில் அரசியல் கைதிகள் அல்லது சாட்சி இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று ஊழல் மோசடி தொடர்பிலும் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம்.