புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
சுற்றாடல் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் வளமான நாடு – அழகான வாழ்க்கை, நிலைபேறான உயிர்சார் உலகம் – எப்போதும் பசுமையான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ், சுற்றாடல் அமைச்சினால் 19,719 மில்லியன் ரூபாய் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.



