அடுத்த நூற்றாண்டுக்கான புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் போர் -வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தாய்வன் அதிபர் அமெரிக்காவில் நிற்கின்றார், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் பிரான்ஸின் அதிபரும் சீனாவில் நிற்கின்றனர். பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது. ஆனால் அதன் அரச தலைவர் தேர்தலில் தோல்வியுற்று பதவியில் இருந்தும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

முஸ்லீம் மக்களின் நோன்பு நாள் என்றும் பார்க்காது இஸ்ரேலிய படையினர் பலஸ்தீனத்தில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். அதேசமயம் லெபனானில் இருந்து 34 உந்துகணைகள் பதிலடியாக இஸ்ரேலை நோக்கி ஏவபட்டுள்ளன.

ஈரானும் சவுதி அரேபியாவும் சீனாவில் கை குலுக்கியுள்ளன. அதேசமயம் அமெரிக்காவின் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதி மன்ற வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நீதி மன்றம் எதிர்கட்சி தலைவர் மீது அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்து தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் பின்னரான அமெரிக்காவினதும் ஜேர்மனியினதும் நடவடிக்கைகள் இந்தியாவை பலவீனப்படுத்தும் செயல் என தெரிவித்துள்ளது புதுடில்லி.

அதாவது ஒவ்வொரு வாரமும் உலகின் இயக்கம் விரைவாக மாற்றம் பெற்று வருகின்றது. இந்த மாற்றங்கள் எல்லாம் அமைதிக்கான வழியாக அல்லாது மேலும் விரிசல்களை உருவாக்கும் நிலைக்கே இட்டு செல்லும் என்பதே துன்பமானது.

இலங்கையின் றுகுணு பகுதியில் சீனா ரடார் நிலையம் ஒன்றை அமைப்பதாகவும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு சீனாவிடம் இருந்து ஒப்புதலை பெற்றதற்கு பிரதி உபகாரமாக இலங்கை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் பிரித்தானியாவின் கின்ங்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவரை மேற்கோள் காட்டி பிரித்தானியா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேசமயம் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை வந்த அமெரிக்காவின் சி.ஜ.ஏ உளவு பிரிவின் தலைவர் இலங்கைக்குள் நுளைபவர்களை கண்டறிவதற்கான உபகரணத்தை வழங்கியதுடன்> நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தகவல் பரிமாற்ற முறைமைக்கும் இலங்கையிடம் அனுமதி பெற்று சென்றுள்ளார்.

அது மட்டுமல்லாது சோபா உடன்பாடு தொடர்பிலும் மீள் விவாதம் செய்யப்பட்டதாகவும் அனைத்துலக நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு சி.ஐ.ஏ தலைவரிடம் உதவியை கேட்ட இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கா அதற்கு பிரதி உபகாரமாகவே அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்கியதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது சீனாவை சுற்றி 250 இற்கு மேற்பட்ட தளங்களை அமைத்துள்ள அமெரிக்கா இலங்கையையும் அதில் இணைப்பதற்கான இறுதி முடிவை எடுத்துள்ளதாகவே தெரிகின்றது. ஆனால் சீனாவும் அதனை விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை.

தாய்வானுக்கு 10 பில்லியன் டொலர்கள் ஆயுதங்களை வழங்கியுள்ள அமெரிக்கா 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 9 பில்லியன் டொலர்களை ஆசிய பசுபிக் பிராந்திய படைத்துறை நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளது.

ஆசியாவில் ஒரு போர் ஏற்படுமாக இருந்தால் அமெரிக்காவின் வழங்கல் பாதைகளுக்கு மிகப்பெரும் ஆபத்துக்கள் ஏற்படும் என்பதுடன் அது பல துறைமுகங்களில் தங்கியிருப்பதால் சீனாவின் விண்வெளி மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் எனவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளதும் இந்த விரிவாக்கத்திற்கான காரணம்.

சீனாவின் ஆதிக்கத்தில் இருந்த மாலைதீவில் இந்தியா தன்னை 2018 ஆம் ஆண்டு நுளைத்துக்கொண்ட போதும் 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா மாலைதீவுடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை மேற்கொண்டதும் இந்தியா அதனை தடுக்க முடியாது போனதும் இந்தியாவிற்கான பின்னடைவு என்கிறது புதுடில்லியை தளமாகக் கொண்ட சிந்தனைப் பள்ளி.

ஆனால் மாலைதீவின் சுற்றுலாத்துறையில் அதிக பங்கு வகிக்கும் சீனா எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறும் அரச தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கலாம் என கருதப்படுகின்றது. மாலைதீவின் பொருளாதாரம் நேரிடையாக 21 விகிதமும் நேரிடையற்று 75 விகிதமும் சுற்றுலாத்துறையில் தான் தங்கியுள்ளது. எனவே சுற்றுலாத்துறையையும் பூகோள அரசியலையும் இணைத்து பயணிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது மாலைதீவு.

இதனிடையே பல நாடுகள் அமெரிக்க டொலரில் தங்கியிருப்பதை தவிர்த்து வருவது என்பது அமெரிக்காவுக்கும் மேற்குலகத்திற்கும் அதிக ஆபத்தானது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் அதற்கான மூல காரணமாக இருப்பது உலகின் மிகப்பெரும் ஏற்றுமதியாளரான சீனா என்பதும் வெளிப்படை.

ஐக்கிய அரபு எமிரேற் பிரேசில் உட்பட பல நாடுகள் டொலர்களை விடுத்து வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளன. மலேசியா மற்றும் பல ஆபிரிக்க நாடுகள் தாமும் அதனை பின்பற்ற முற்பட்டு நிற்கின்றன. டொலரை அமெரிக்கா ஆயுதமாக பயன்படுத்துவதே இந்த நாடுகளின் மாற்றத்திற்கான முக்கிய காரணம்.

ஆனால் தனது நாணயம் வலுவிழந்து போவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. அதற்கான எதிர்வினையாகவே தாய்வானின் மூலம் சீனாவை போருக்கு இழுத்து அதன் பொருளாதாரத்தை அழித்துவிட திட்டமிட்டு வருகின்றது.

ஏற்கனவே உலகின் மிகப்பெரும் ஏற்றுமதியாளனாக விளங்கும் சீனா, தென்சீனக் கடலில் உள்ள 11 பில்லியன் பரல்கள் எண்ணை படிமத்தையும் 190 றில்லியன் சதுர அடி இயற்கை வாயுவையும் பயன்படுத்த ஆரம்பித்தால் அதன் பொருளாதார மற்றும் படைத்துறை கட்டமைப்பு அமெரிக்காவினதை விட பல மடங்கு அதிகமாகிவிடும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு உண்டு.

ஆனால் இந்த போட்டியில் யார் யாரை தோற்றடிக்கப் போகின்றனர் என்பதை தீர்மானிக்கும் களமாக உக்ரைன் உள்ளது என்பது தான் இன்றைய யதார்த்தம். தற்போது மந்தமாக உள்ள களமுனை மிகப்பெரும் வலிந்த தாக்குதல் ஒன்றுக்காக காத்திருக்கின்றது.

மேற்குலகத்தின் ஆயுதங்களுடன் 40,000 படையினருடன் உக்ரைன் வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்கான உளவு பணியில் ஈடுபட்டிருந்த போதே அமெரிக்காவின் எம்.கியூ-9 என்ற ஆளில்லாத தாக்குதல் விமானம் வீழ்த்தப்பட்டிருந்தது.

வீழ்த்தப்பட்ட விமானத்தின் பெறுமதி 100 மில்லியன் டொலர்கள் என தற்போது வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்மதி புகைப்படங்களும் கிரைமியா பகுதியில் ரஸ்யா தனது படையினரை குவித்து வருவதாக தெரிவிக்கின்றன.

அதாவது இந்த வலிந்த தாக்குதலில் உக்ரைன் தோல்வியை தழுவினால் பேச்சு மேடைக்கு திரும்புவதை விட அதற்கு வேறு வழிகள் இருக்கப்போவதில்லை. அதேசமயம் தாய்வான் பிரச்சனை என்பாது சீனாவையும் ரஸ்யாவையும் ஒரு அணியில் இணைக்கும் வழியை திறந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதாவது உக்ரைன் போரின் வெற்றி தோல்வி என்பது உலகின் இயக்கத்தை அடுத்த 100 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கும் முடிவாகவே இருக்கும். அந்த மாற்றம் என்பது பல நாடுகளிலும் மாற்றங்களை கொண்டுவரலாம்.