இலங்கை தமிழ் பெண்ணொருவர் தனது வீடு உட்பட சொத்துக்களை விற்றுவிட்டு படகு வழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
தனது சொத்துக்களை விற்று கிடைத்த பணத்தை தமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்வதற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். அவரும் அவரது இரண்டு பிள்ளைகளையும் படகோட்டியொருவர் தனுஸ்கோடியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
தமிழக காவல்துறையினர் அவர்களை மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாந்தி என்ற அந்த பெண் நேற்றிரவு தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு இன்று காலை தனுஸ்கோடி சென்றுள்ளார்.
“எனது கணவர் சில வருடங்களிற்கு முன்னர் இறந்துவிட்டார் நானே எனது பிள்ளைகளை வளர்த்துவந்தேன். வீடுகளில் வேலை பார்த்தேன். அந்த வருமானம் வாழ்வதற்கு போதுமானதல்ல. அனேகமாக நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவையே உணவுண்டோம். இந்த பயணம் கடினமானது ஆனால் நாங்கள் உயிர்வாழவேண்டும்” என அவர்தெரிவித்துள்ளார்.