தென் சீனக் கடலில் ஊடகவியலாளர்களுடன் பறந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை வெளியேறுமாறு உத்தரவிட்ட சீனக் கப்பல்

தென் சீனக் கடல் பகுதியில், ஊடகவியலாளர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் கரையோரக் காவல் படையின் விமானமொன்றை அங்கிருந்து வெளியேறுமாறு சீனக் கப்பலொன்றிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் சீனக் கடல் பகுதிகளுக்கும் அங்குள்ள தீவுகளுக்கும் சீனா, பிலிப்பைன்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் உரிமை கோருகின்றன.

இந்நிலையில், ஸ்பிராட்லி ஐலன்ட்ஸ் எனும் சிறிய  தீவுப்பகுதிகளை பார்வையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் குழுவொன்றை பிலிப்பைன்ஸின் கரையோர காவல் படை விமானமொன்று நேற்று வியாழக்கிழமை  அப்பகுதிக்கு ஏற்றிச் சென்றது. ஏஎவ்பி முதலான சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் இக்குழுவில் அடங்கியிருந்தனர்.

இவ்விமானம் 3500 அடி (1,000 மீற்றர்) உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, உடனடியாக வெளியேறவும் என்ற உத்தரவு வானொலி மூலம் விடுக்கப்பட்டது.

அப்பகுதியில் காணப்பட்ட சீனக் கரையோர காவல்படையின் கப்பல்கள் ஒன்றிலிருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

ஸ்பிராட்லி தீவுகள் உட்பட ஏறத்தாழ தென் சீனக் கடல்பகுதி முழுவதுக்கும் சீனா உரிமை கோருகிறது. எனினும் இதை நிராகரித்து சர்வதேச தீர்ப்பொன்றும் உள்ளது. ஆனால், சீனா இன்னும் அதற்கு உரிமை கோரி வருகிறது.

தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவத்றகான நூற்றுக்கணக்கான சீன கரையோர காவல்படை படகுகள் அப்பகுதிகளில் ரோந்து செல்கின்றன.  அப்பகுதிகளில் செல்லும் மீன்பிடிப் படகுகள் மற்றும் ஏனைய படகுகளை சீனப் படையினரின் தாக்குவதுடன் தொந்தரவு ஏற்படுத்துவதாகவும்,. அப்பகுதிகளுக்கு மேலாக பறக்கும் விமானங்களை வெளியேற்றவும் சீனப்படையினர் முயற்சிக்கின்றனர் எனவும் ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்படி ஸ்பிராட்லி தீவுகளுக்கு மேலாக பிலிப்பைன்ஸ் விமானம் அப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், தனது நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே பறந்துகொண்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் விமானி பதிலளித்தார் என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.