ஆஸ்திரியாவில் வனப்பகுதியுடன் வடிவமைக்கப்பட்ட கால்ப்பந்து மைதானம்

ஆஸ்திரியாவில் “பார்பாரஸ்ட்“ என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள வனப்பு மிகுந்த வனப்பகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கிளஜன்பர்ட் நகரில் 30ஆயிரம் அரங்குகள் கொண்ட மைதானத்தின் நடுவில் 300 மரங்கள் நடப்பட்டுள்ளன.  சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கிளாஸ் லிட்மேன் என்பவர் இந்த மைதானத்தை வடிவமைத்துள்ளார். பசுமையான மரங்கள் மையத்தில் காட்சியளிக்க, மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளித்திரைகளில் பெண்கள் பாடுவது, வயலின் வாசிப்பது போன்ற காட்சிகள் திரையிடப்படுகின்றன.

கண்ணிற்கும், காட்சிக்கும் விருந்தளித்து நிற்கும் இந்த கால்பந்து மைதானத்தில் பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்து விட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மேக்ஸ் பீன்ட்னர் என்பவர் 1970ஆம் ஆண்டில் வரைந்த ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கால்பந்து மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கானக கால்பந்து மைதானத்தை கண்டு களிக்க வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.