Home செய்திகள் இன்று ஐ நா மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பம் ; இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்படலாம்

இன்று ஐ நா மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பம் ; இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்படலாம்

உறுதிமொழிகளுக்கு அமைவான பொறுப்புக்கூறலில் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வியெழுப்படலாம்  எனவும் நிலையான பொறிமுறையொன்றின் கீழ் இலங்கையை கண்காணிக்கும் யோசனையை சிறப்பு அந்தஸ்துள்ள அமைப்புகள் கூட்டத்தொடரில் வலியுறுத்தவும் உள்ளன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று இந்த கூட்டத்தொடரின் போது சவேந்திர சில்வாவின் நியமனம் உள்ளிட்ட இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் எட்டுப்பேர் கொண்ட நிபுணர் குழுவின் கூட்டறிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று  திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்த கூட்டத்தொடர்  ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

உறுதிமொழிகளுக்கு அமைவான பாதுகாப்புத்துறைசார்  மறுசீரமைப்புக்களை இலங்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் துரித விசாரணைகளையும் இந்த குழு வலியுறுத்தியுள்ளது.

உண்மை , நீதி , இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான விஷேட அறிக்கையாளர் பாபின் சல்வியோலி, வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான ஐ.நா செயற்குழு உறுப்பினர்களான பேர்னாட் துஹெய்மி , தா ஹூங்கா பாய்க், கூறியா எஸ் சிலோமி, யூசியானோ கசன், கென்ரிகாஸ் மைக்கெவிசியஸ், சட்டத்துக்கு முரணான படுகொலைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ஹெக்னேஸ், கோலாமாட் , சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு எதிரான விஷேட நிபுணர் நீல்ஸ் உள்ளிட்டவர்களே இவ்வாறு இலங்கை குறித்து கூட்டறிக்கையினை வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்ற கூட்டத்தொடரில்  இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து பிரதான நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட வில்லை. ஆனால் கூட்டதொடரின் பக்க கலந்துரையாடல்களின் போது இலங்கை குறித்து சர்தேச மன்னிப்புச்சபை  மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட  ஐ.நாவில் நிரந்தர சிறப்பு அந்தஸ்துள்ள  மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன  இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளன.

இதேவேளை பொறுப்புக்கூறல் விடயத்தில் கடப்பாடுடைய  சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதானது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமல்ல. அத்தோடு பாதிப்புற்ற தரப்பினரை அச்சுறுத்துவதாகவும் அந்த மக்களை அச்ச சூழலுக்குள் தள்ளுவதுமாகவே இந்த நியமனம் அமையப்பெற்றுள்ளது. இந் நிலையானது நல்லிணக்கத்தை முற்றிலுத் பாதித்து விடும் என்றும் ஐ.நா நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரில் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக சவேந்திர சில்வா செயற்பட்டார். போர்க்குற்றங்களிலும், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களிலும் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படையணி தொடர்புப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான விசேட ஆலோசனைக் குழுவிலிருந்து 2012 ஆம் ஆண்டு சவேந்திர சில்வா நீக்கப்பட்டார். இதே வேளை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30 (1) தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் ஊடாக இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் பொறுப்குக்கூறலுக்கு இலங்கை உடன்பட்டுள்ளது  என்றும் நிபுனர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே சவேந்திர சில்வா விவகாரம் மற்றும் கால அவகாசத்தின் அடிப்படையிலான முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் நிவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூகா இலங்கை விவகாரத்தை 42 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வுகளின் போது கவனத்தில் கொள்ளவுள்ளனர்.

மேலும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்தும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள நிலையில் இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற இராணுவ தளபதிகளுக்கு அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியமை தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சவேந்திர சில்வாவின் நியமனமானத்தின் பின்னர் இந்த நிலை மேலும் வலுவடைந்துள்ள நிலையில் ஐ.நா செயலாளர் நாயம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட பல நாடுகளும் கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.