மக்களின் சனநாயக போராட்டத்திற்கு பணிந்தது கொங் கொங் அரசு

கொங் கொங்கை போராட்டக் களமாக மாற்றிய சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 5 கோரிக்கைகளில் ஒன்று மட்டும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், கொங் கொங்வாசிகளின் போராட்டம் நிரந்தரமாக முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கொங்கொங், 1997ஆம் ஆண்டில் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், “ஒரே நாடு-இரு முறைகள்” என்ற அடிப்படையில் கொங் கொங் சிறப்பு நிர்வாக மண்டலமாக சீனாவால் அங்கீகரிக்கப்பட்டது. சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டது என்றாலும், ஆட்சி முறையும், பொருளாதார முறையும் சீனாவிலிருந்து மாறுபட்டதாக தனித்தன் மையுடன் பராமரிக்கப்படுகிறது. இதனால், சீனர்கள் என்பதை விட ஹாங்காங்வாசிகள் என்பது தனி அடையாளமாகவே பேணப்படுகிறது. ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவராக, சீன அரசின் ஆதரவு பெற்ற கேரி லாம் ((Carrie Lam)) என்ற பெண்மணி உள்ளார். இந்நிலையில், கொங் கொங்கில் குற்றவழக்குகளில் சிக்குவோரை சீனாவுக்கு கொண்டுசென்று விசாரிக்க வகை செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு ஹாங்காங்வாசிகளிடையே கடும் எதிர்ப்பு உருவாகி போராட்டங்கள் வெடித்தன.

போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து சுயேச்சையான விசாரணை, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பது, ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலவரக் காரர்கள் என குறிப்பிடுவதை கைவிடுவது ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்தன. ஆட்சிமன்ற பிரதிநிதிகளையும், தலைமை நிர்வாகியையும் மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமைக்கான கோரிக்கையும் போராட்டக்காரர்களாக முன்வைத்தனர். இந்நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த, குற்றவழக்குகளில் சிக்குவோரை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் திரும்பப் பெற்றுள்ளார்.

இருப்பினும் 5 கோரிக்கைகளில் ஒன்றைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என போராட்டக்காரர்கள் ஏற்கெனவே கூறியிருப்பதால், போராட்டங்கள் ஓயுமா என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. போராட்டங்களுக்கு பணிந்து, சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாக திரும்பப் பெற்றாலும் மற்ற 4 கோரிக்கைகளை கேரி லாம் ஏற்கவில்லை.

சட்டம்-ஒழுங்கை மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறியுள்ள கேரி லாம், மோதல்களை உரையாடல்களாக மாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என குறிப்பிட்டுள்ளார். ஹாங்காங் போராட்டங்களால் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயர் காரணமாகவும், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு விழா அக்டோபர் 1ஆம் தேதி கொண் டாடப்பட இருப்பதால் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவுமே சர்ச்சைக்குரிய மசோதா முழுமையாக திரும்பப் பெறப்பட்டிருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.